டிசம்பர் 13, சென்னை (Sports News): மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய 2024ம் ஆண்டு, தொடங்கிய வேகத்தில் நிறைவுபெறுகிறது. 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டில் அடியெடுத்து வைக்க, இன்னும் 17 நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இந்த நாட்களில் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இன்று வரை நாம் எடுத்துள்ள முடிவுகள், அதனால் ஏற்பட்ட சாதக-பாதகங்களை கண்டறிந்து, அதற்கேற்ப நிலைகளை மாற்றிச் செயல்பட நாம் உந்தப்பட்டு வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவற்றை நாம் கணக்கிட வேண்டும் என்பதால், இந்த செய்தித்தொகுப்பில் 2024ம் ஆண்டில் விளையாட்டு பிரிவில் தேசிய அளவில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் காணலாம்..
விளையாட்டில் வெற்றி-தோல்வி இயல்பு:
கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிட்டன், தடகளம் என பல்வேறு பிரிவுகள், சர்வதேச அளவில் நடந்த பல விளையாட்டுகளில் இந்திய தன்னை முன்னிறுத்தி செயல்பட்டது. அதில், இந்தியாவில் ஒவ்வொருவரின் இரத்தத்திலும் ஊறிப்போன பற்றுள்ள விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட்டின் தொடக்கம் இனிமையாக இருந்தாலும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை அடைந்து கோப்பையை கைப்பற்றினால், இறுதி தருணத்தில் 12 ஆண்டுகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்த கோட்டை மனப்பான்மை நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தால் தவிடுபிடியானது.
கேலோ இந்தியா விளையாட்டு (Khelo India Youth Games 2024):
இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் விளையாட்டுத் திறன் கொண்ட வீரர்களை அடையாளம் காணும் வகையில், தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுகள் ஜனவரி மாதம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா 2024 விளையாட்டில், மகாராஷ்டிரா அணி 57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 158 பதக்கங்களை தட்டிச் சென்றது. தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி உட்பட 98 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தையும், ஹரியானா 35 தங்கம், 22 வெள்ளி என 103 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்தது. Karthigai Deepam 2024: கார்த்திகை மகாதீபம் 2024; நேரலையில் பார்ப்பது எப்படி? நன்கொடை செய்ய.. விபரம் இதோ..!
இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 போட்டிகள் (Afghanistan tour of India 2024):
கிரிக்கெட்டை பொறுத்தவரையில், ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தனது டி20 போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி அடைந்தது. மூன்றாவது போட்டியில், சூப்பர் ஓவர் முறையில் இந்தியா வென்றது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் (England tour of India 2024):
இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டெஸ்ட் போட்டியில் மோதிய இங்கிலாந்து அணி, ஜனவரியில் இறுதி முதல் மார்ச் வரை டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது. இதில், முதல் ஆட்டத்தில் மட்டும் வெற்றி அடைந்தது. எஞ்சிய 4 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், இந்திய அணியின் அதிரடியான தொடக்கம் உலகளவில் எதிரொலித்து இருந்தது.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் & டி20 போட்டிகள் (Bangladesh tour of India 2024):
3 டி20, 2 டெஸ்ட் என 5 போட்டிகளில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொண்ட நிலையில், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி 5 க்கு 5 போட்டிகளையும் கைப்பற்றி அசத்தி இருந்தது. இந்த ஆட்டங்கள் மிகப்பெரிய அளவில் மீண்டும் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது.
இந்தியா - நியூசிலாந்து : (New Zealand tour of India):
சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிரிவில், இந்தியாவுக்கு வருகை தந்திருந்த நியூசிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அதிகம் செலுத்தி வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியை அதிரடியாக எதிர்கொண்டு 3 போட்டியிலும் வெற்றி அடைந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் மைதானத்தை தனது கோட்டையாக மாற்றி வைத்திருந்த இந்தியா, சொந்த மண்ணில் கோட்டைவிட்டது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் இந்தியா 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. மொத்தமாக 2024ம் ஆண்டில் இந்தியா 12 டெஸ்ட் விளையாட்டுகளை எதிர்கொண்டது.
ஆடவர் டி20 உலகக்கோப்பை 2024 (2024 Men's T20 World Cup):
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி அடைந்திருந்த நிலையில், கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இந்தியா - தென்னாபிரிக்கா இடையேயான போட்டியில், இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் ஆடவர் உலகக்கோப்பையை தன்வசப்படுத்தியது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கு, இந்திய அணியை ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டனாக தலைமை தாங்கி இருந்தார்.
டி20 க்கு புதிய கேப்டன் (T20 Team India Captain):
17 ஆண்டுகளுக்கு பின்னர் ஆடவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா, அந்த வெற்றிக்கு வழிவகை செய்த ரோஹித் சர்மாவை டி20 போட்டியில் இருந்து விலக காரணமாக அமைந்தது. தனது கேப்டன்சியில் வெற்றியை கொடுத்த ரோஹித் சர்மா, தனது ஓய்வையும் அறிவித்தார். டி20 போட்டிகளில் 17 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது விளையாட்டை தொடங்கி இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கோப்பையை கைப்பற்றியதும், ஓய்வு தொடர்பாக அறிவித்தார். இதன் வாயிலாக சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) டி20 கேப்டன் பொறுப்புக்கும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், ரோஹித் தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். மேலும், கெளதம் கம்பீர் (Gautam Gambhir) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
ஐபிஎல் 2024 (IPL 2024):
தேசிய அளவில், பல நாடுகளின் வீரர்களை ஏலம் முறையில் எடுத்து நடக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் விளையாட்டு, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாகும். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி கோப்பையை தட்டிச்சென்றது.
ஒலிம்பிக் & பாரா ஒலிம்பிக் போட்டிகள் (Olympic Games Paris 2024):
33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில், மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 26 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு இருந்தனர். இந்த போட்டியில் இந்தியா 5 வெண்கலம், 1 வெள்ளி என 6 பதக்கங்கள் மட்டுமே பெற்று இருந்தது. துப்பாக்கிசூடுதல் பிரிவில் மனு பர்க்கர், ஸ்வப்னில் குஷாலே, சரஜோத் சிங் ஆகியோரும், ஹாக்கியில் ஹர்மான்ப்ரீத் சிங் தலைமையிலான அணியும், ஈட்டி எரித்தலில் நீரஜ் சோப்ராவும் பதக்கத்தை வென்று இருந்தனர். அதிக பதக்கங்களை பெற்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளது. 17 வது பாரா ஒலிம்பிக்ஸ் (Paralympics 2024) போட்டியில், இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu) வெற்றியை உரித்தாக்கி தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார்.
செஸ் ஒலிம்பியாட் (45th Chess Olympiad):
ஹங்கேரி நாட்டில், புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆடவர் - பெண்கள் அணி தனித்தனியே பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இந்திய செஸ் அணியின், ஆண்கள் பிரிவு வீரர்கள் விதித் குஜராத்தி, அர்ஜுன், ப்ரக்யானந்தா, பென்டலா ஹரிகிருஷ்ணா, குகேஷ் ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தனர். இந்திய பெண்கள் செஸ் அணியின் திவ்யா, ஹரிகா, வைஷாலி, டனியா, வந்திகா அகர்வால் ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்றனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2024 (World Chess Championship):
சிங்கப்பூரில் வைத்து நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இறுதி வரை நீண்ட போராட்டத்தை ஏற்படுத்தி செஸ் விளையாட்டில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்தியா சார்பில் களம்கண்ட இளம் சதுரங்க விளையாட்டு வீரர் குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
வில்வித்தை போட்டி (Archery World Cup 2024):
வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டி 2024, மெக்சிகோ நாட்டில் உள்ள டைலாக்ஸ்கலா நகரில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி (Deepika Kumari) வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
காவல் கண்காணிப்பாளராக முகம்மத் சிராஜ் (Mohammed Siraj):
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர், இந்தியர்களின் மனம் கவர்ந்த ஆட்டக்காரர் முகமது சிராஜ், தெலுங்கானா காவல்துறை இயக்குனர் ஜிதேந்தர் (டிஜிபி) முன்னிலையில், துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
எதிர்பாராமல் நடந்த அசத்தல் ஆட்டம்:
அமீரகத்தில் பெண்கள் டி20 அணியும், இந்தியாவில் ஆண்கள் டி20 அணியும், 80+ ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்த சுவாரஷ்ய நிகழ்வு இந்த ஆண்டிலேயே நடைபெற்றது. அதனை விரிவாக இங்கு படிக்கவும் Team India T20i: பெண்கள் டி20 Vs ஆண்கள் டி20 .. 80+ ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி.. முழு விபரம் உள்ளே.!
சீனா ஓபன் டென்னிஸ் (China Open Tennis 2024):
சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடந்த ஓபன் சர்வதேச டென்னிஸ் (China Open Tennis) போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) மற்றும் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோதிக்கொண்டு, இறுதியில் வெற்றியை கார்லஸ் தட்டிச் சென்றார்.
வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஒலிம்பிக் தீர்ப்பாய முடிவு:
பாரிஸ் ஒலிம்பிக் 2024 (Paris Olympics 2024) தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் (Vinesh Phogat), இறுதிப் போட்டியில் எடை தொடர்பான சர்ச்சையில் சிக்கி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மனமுடைந்த அவர், விளையாட்டில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருந்தார். இதன் வாயிலாக விளையாட்டு வீராங்கனை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதியில் இருந்து, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பாஜக முக்கிய நிர்வாகி, மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, இன்று அவரை அவை விசாரணை கூட நடக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பார்முலா 4 கார் பந்தயம் (Formula 4 Car Race):
சென்னையில், முதல் முறையாக பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. 2 நாட்கள் சென்னை நகரின் வீதிகளில் பந்தய கார்கள் அலங்கரித்தது. இந்த முயற்சியை முதல் முறை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருந்தது.
வினையான விளையாட்டு:
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் உள்ள என்சரிகோரில், கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 100 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் டிசம்பர் தொடக்கத்தில் நடந்தது.
கோபா அமெரிக்கா & யூரோ கால்பந்து போட்டிகள் 2024 (Copa America 2024 & Euro Cup 2024):
அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் (Copa America), மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அர்ஜென்டினா அணி வெற்றி அடைந்தது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இறுதிப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 16 வது முறையாக கோபா அமெரிக்கா பட்டத்தை அர்ஜென்டினா வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு, இந்திய மதிப்பில் ரூ.601 கோடி பரிசு கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவுக்கு கேலோ, தமிழ்நாட்டுக்கு சிஎம் கோப்பை (CM Trophy 2024):
தேசிய அளவில் கேலோ இந்தியா போட்டிகள் மூலமாக, பல விளையாட்டு பிரிவுகளில் திறமையானோர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டில், மாநில அளவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், தனிநபர்களின் திறமையை அடையாளம் காணவும் மாநில அரசு சார்பில் முதல்வர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சிஎம் கோப்பையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்கள் முதல் 3 இடங்களை தட்டிச்சென்றது.
தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறு..