Coimbatore: டெலிகிராம், வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்.. ரூ.30 லட்சம் அபேஸ்.. மக்களே உஷார்.!
கோயம்புத்தூரை சேர்ந்த பெண் மற்றும் ஆண் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைத்து ரூ.30 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அக்டோபர் 19, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூரை சேர்ந்த 32 வயது பெண் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற எண்ணிய நிலையில், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதால் அதிக லாபம் கிடைக்கும் என டெலிகிராமில் வந்த செய்தியை நம்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கிரிப்டோ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கணக்கு தொடங்கி பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ரூ.24 இலட்சத்தை இழந்த பெண்:
இதனை தொடர்ந்து அவரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பல்வேறு வங்கி கணக்குகளில் 12 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.24 லட்சத்தை பெண்மணி முதலீடு செய்துள்ளார். முதலீட்டில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் அந்த நபருக்கு தொடர்பு கொள்ளவே, அவர் அழைப்பை துண்டித்ததாக தெரிய வருகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி கடந்த வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபரும் இதுபோன்ற மோசடியால் ரூ.6 லட்சத்தை இழந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தீபாவளி 2025: பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வழிமுறைகள்.. தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?.. அவசர எண்கள் அறிவிப்பு.!
ரூ.6 லட்சத்தை இழந்த நபர் கதறல்:
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் வந்த செய்தியை நம்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் ரூ.6 லட்சத்தை மாற்றியதாக தெரிவித்தார். இதன்பின் லாபம் கிடைக்காமல், முதலீடு செய்த பணமும் கிடைக்காமல் அவதிப்பட்டவர் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். இந்த இரண்டு புகார்களையும் தனித்தனி வழக்குகளாக பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களே கவனம்:
மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி தங்களது பணத்தை அனுப்ப கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளை சந்தித்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு 1930 ஹெல்ப்லைன் அல்லது cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டும் என எண்ணி பலரும் சமீப காலமாக பணத்தை இழந்து வரும் நிலையில், இனிவரும் காலங்களில் இது போன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Oct 19, 2025 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

