Tiruvannamalai: தெருநாய்களால் பறிபோன உயிர்.. ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!

ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Tiruvannamalai: தெருநாய்களால் பறிபோன உயிர்.. ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
4-Year-Old Girl Dies in Tiruvannamalai Accident (Photo Credit : Youtube)

செப்டம்பர் 03, சென்னை (Chennai News): தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிலும் தெருநாய்கள் தொல்லை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் ஒரு சில நேரம் சாலையில் நடந்து செல்வோரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் பலரும் நாய் கடிபட்டு அவதிப்பட்டு உயிர் பிழைத்தாலும், ஒரு சில நேரம் ரேபிஸ் போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் நடக்கின்றன.

தெருநாய்களால் தொடரும் சோகம் :

நாய் கடி மரணம் என ஒரு பக்கம் சோகங்கள் நிகழ்ந்து வந்தாலும் நாய்களின் தொல்லை என்பது அனுதினமும் தொடர்ந்து வருகிறது. இதனிடையே டெல்லி உச்சநீதிமன்றம் தெருநாய்களை பிடித்து அடைக்க வேண்டும் எனவும் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து பின் ரத்து செய்தது. நாய் பிரியர்களின் அளவு கடந்த பாசத்தால் நடந்த போராட்டங்கள் உள்ளிட்டவையால் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை ரத்து செய்தது. இது தொடர்பாக சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாகவும் மாறியிருந்தது. மக்களே கவனமா இருங்க.. தமிழ்நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.! 

விபத்தில் சிக்கிய குடும்பம் :

இந்நிலையில் ஆரணி பகுதியில் தெருநாய் குறுக்கே விழுந்து சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வசித்து வருபவர் கார்த்தி (வயது 30). இவருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில், அனாமிகா என்ற 4 வயது மகளும் இருக்கிறார். சம்பவத்தன்று சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவரை பெற்றோர் மந்திரிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது தச்சூர் சாலையில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சண்டையிட்டபடி கார்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்த நிலையில் படுகாயமடைந்தனர்.

4 வயது சிறுமி மரணம் :

இதனை தொடர்ந்து மூவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அனாமிகா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தாய், தந்தை இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்தி காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தெருநாய் தொல்லை அப்பகுதியில் அதிமாகி இருப்பதாகவும் மாநகராட்சி அதனை சரிசெய்து தர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Sep 03, 2025 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).