ENG Vs IND 2nd Test, Day 3: ஜேமி ஸ்மித் - ஹரி புரூக் இணை அபாரம்.. இந்தியா 244 ரன்கள் முன்னிலை..!
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 2வது இன்னிங்ஸில் 1 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் அடித்துள்ளது.
ஜூலை 04, பிர்மிங்ஹாம் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 02) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 2nd Test) மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ENG Vs IND 2nd Test, Day 3: ஜேமி ஸ்மித் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 151 ஓவர்களில் 587 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் கில் நிலைத்து நின்று இரட்டை சதமடித்து (269 ரன்கள்) அசத்தினார். ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள், ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தனர். வாசிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு 42 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் க்ராலி 19, பென் டக்கெட் 0, ஒல்லி போப் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 77 ரன்கள் அடித்தது.
இங்கிலாந்து அதிரடி ஆட்டம்:
இந்நிலையில், இன்று 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில் சிராஜ் ஓவரில் ஜோ ரூட் 22, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 0 என அடுத்தடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன்பின்னர், ஹரி புரூக் - ஜேமி ஸ்மித் இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்த நிலையில், ஹரி புரூக் 158 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் 184* ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா சார்பில் சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்தியா முன்னிலை:
இதனையடுத்து, இந்தியா 180 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அதிரடியாக ஆரம்பித்த ஜெய்ஸ்வால் 28 ரன்னில் அவுட்டானார். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 2வது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் அடித்துள்ளது. கேஎல் ராகுல் 28* ரன்கள், கருண் நாயர் 7* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 04, 2025 11:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

