நவம்பர் 19, ராமேஸ்வரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், சேராங்கோட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞர் முனியராஜ். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய சிறுமி ஷாலினி ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே கடந்த சில வாரங்களாகவே மாணவி ஷாலினிக்கு இளைஞர் முனிராஜ் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்த நிலையில், அவர் இளைஞர் முனியராஜை நேரில் சந்தித்து எச்சரித்து இருக்கிறார். Half Year Examinations Tamilnadu: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு... மாணவர்களே முழு லிஸ்ட் இதோ.!
மாணவி கத்தியால் குத்திக்கொலை:
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவி பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். மாணவியை வழிமறித்த முனியராஜ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். இந்த விஷயத்திற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், மீன் வலையை சரி செய்ய பயன்படுத்தும் கத்தி கொண்டு கழுத்தில் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் கத்திக்குத்து காயத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்நிலையத்தில் தள்ளுமுள்ளு:
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இளைஞர் முனியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் பலரும் மருத்துவமனையில் கண்ணீருடன் குவிந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் பலரும் ராமேஸ்வர துறைமுக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்குமாறும், தங்கள் பிள்ளையை கொன்றவரை சும்மா விட முடியாது எனவும் கூறி காவல்நிலையத்திற்குள் நுழைய முயன்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டுள்ளனர்.