Madurai Chithirai Festival: பச்சை பட்டுடுத்தி.. தங்கக்குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..! விண்ணைப் பிளந்த பக்தர்கள் கோஷம்..!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார்.

Madurai Chithirai Festival: பச்சை பட்டுடுத்தி.. தங்கக்குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..! விண்ணைப் பிளந்த பக்தர்கள் கோஷம்..!
Kallalagar (Photo Credit: @devoffcl X)

மே 12, மதுரை (Madurai News): மதுரையில் உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா (Chithirai Thiruvizha 2025) கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (மே 12) நடந்தது. இதற்காக, மே 10ல் அழகர்கோயிலில் புறப்பட்டு, மதுரை வந்த கள்ளழகருக்கு (Kallalagar) நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மூன்று மாவடியில் 'எதிர்சேவை' நடந்தது.  Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!

கள்ளழகர் தரிசனம்:

இதனையடுத்து, இன்று (மே 12) அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வழிநெடுகிலும், கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 6 மணியளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார். கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது, 'கோவிந்தா கோவிந்தா' என்று பக்தர்கள் கோஷமிட்டனர்.

கள்ளழகர் புறப்பாடு:

தொடர்ந்து, நாளை (மே 13) வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு, பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும், பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நாளை மதியம் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார்.

(The above story first appeared on LatestLY on May 12, 2025 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).