வானிலை: 17 மாவட்டங்களில் மாறும் வானிலை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 21, நுங்கம்பாக்கம் (Chennai News): கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இன்றைய வானிலை (Today Weather):
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. Gold Rate Today: குறையும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இறங்குமுகம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):
சென்னை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.