மே 14, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காட்கோபர், சேதா நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. சில இடங்களில் மின்சார கம்பிகள் சேதமடைந்ததால், நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சார சேவை என்பது பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல் பங்குக்கு அருகே பிரம்மாண்ட அளவிலான 100 அடி உயரமுள்ள விளம்பர பதாகை உள்ளது. நேற்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, விளம்பர பேனர் எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பெட்ரோல் பங்கில் நின்றுகொண்டு இருந்த 100 க்கும் மேற்பட்டோர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். Chennai Shocker: கோபம் வருவது போல் எரிச்சல் கலாய்; வம்பிழுத்தவரின் வாயிலேயே வெட்டிக்கொன்ற இளைஞர்கள்.. சென்னையில் பரபரப்பு.!
பேனர் சரிந்து விழுந்து சோகம்: இந்த விபத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 74 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 பேர் தற்போது வரை பலியாகி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருக்கும் சிலரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் விளம்பர பேனர் வைத்த ஈகோ மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் பாவேஷ் பண்டல் மீது பண்ட்நகர் காவல்துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 337, 338ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வானிலை மாற்றத்தால் துயரம்: இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தனது இரங்கலை பதிவு செய்த அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி வழங்குவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதேபோல, நேற்று மும்பையில் நிலவிய திடீர் வானிலை மாற்றத்தால், மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதந்த 14 விமானங்கள் நடுவானிலேயே மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
வாடாலாவில் மற்றொரு சம்பவம்: நேற்று காட்கோபர் பகுதியில் இவ்விபத்து நடைபெறுவதற்கு முன்பு வாடாலா பகுதியில் உள்ள 14 மாடிகள் கொண்ட கார் நிறுத்துமிடத்தில், பக்கவாட்டில் நடந்த பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த முட்டுக்கம்பிகள் சாலையில் சரிந்து விழுந்ததில் 7 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 50 கார்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.