வானிலை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 29, நுங்கம்பாக்கம் (Weather News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 40.2° செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 21.0° செல்சியசும் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஜூன் 29 முதல் ஜூலை 05 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
ஜூன் 29 முதல் ஜூலை 01 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (ஜூன் 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (ஜூன் 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று ஜூன் 29 முதல் ஜூலை 03 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள் :
இன்று (ஜூன் 29) மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு ஆந்திரா-ஒரிசா-மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் :
இன்று (ஜூன் 29) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, கொங்கன் கடலோரப்பகுதிகள், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கோவா, கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Jun 29, 2025 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

