வானிலை: 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளைய வானிலை: 18 மாவட்டங்கள் டார்கெட்.. தீபாவளிக்கு வருண பகவான் வைத்த வேட்டு.!
இன்றைய வானிலை (Today Weather):
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Oct 19, 2025 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

