நவம்பர் 21, ராமேஸ்வரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், சேராங்கோட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞர் முனியராஜ். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய சிறுமி ஷாலினி ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே கடந்த சில வாரங்களாகவே மாணவி ஷாலினிக்கு இளைஞர் முனிராஜ் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்த நிலையில், அவர் இளைஞர் முனியராஜை நேரில் சந்தித்து எச்சரித்து இருக்கிறார். Gold Rate Today: குறையும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இறங்குமுகம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை:
இந்த நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று காலை வழக்கம் போல மாணவி பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது மாணவியை வழிமறித்த முனியராஜ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். இந்த விஷயத்திற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, மீன் வலையை சரி செய்ய பயன்படுத்தும் கத்தியை கொண்டு கழுத்தில் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் கத்திக்குத்து காயத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் காவல் துறையினர் முனியராஜை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், தான் எதற்காக கொலை செய்தேன் என அவர் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
ஒருதலைக்காதலால் பறிபோன உயிர்:
முனியராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, "ஷாலினி தினமும் பள்ளிக்கு செல்லும்போது நேரில் சந்தித்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தேன். நாம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று வாழலாம் எனக் கூறினேன். ஒருதலையாக ஷாலினியை தீவிரமாக காதலித்து வந்தேன். என் காதலின் சாட்சியாக அவளது பெயரை நெஞ்சில் பச்சையும் குத்தி இருக்கிறேன். ஷாலினியோ என்னை வேண்டாம் என்று கூறிவிட்டு, எனக்கு படிப்பு வேண்டும். உயர்கல்விக்கு நான் செல்ல வேண்டும். என்னை பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்க வேண்டாம் என கூறினாள். இனியும் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அப்பா, அம்மாவிடம் சொல்லி போலீசில் புகார் அளிப்பேன் என்று எச்சரித்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்" என தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.