வானிலை: நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'.. வானிலை மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மே 29, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. வானிலை: இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
நேற்று (மே 28) காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (29-05-2025) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள - வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது சாகர் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகாவிற்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், கேபுபாராவிற்கு மேற்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, மேற்கு வங்காளம் - வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும், கேபுபாராவிற்கும் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்க கூடும்.
இன்றைய வானிலை (Today Weather):
இன்று (29-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. மக்களே குடையோடு போங்க.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
நாளை (30-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
31-05-2025 முதல் 04-06-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):
சென்னையில் இன்று (29-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (30-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று 29-05-2025 மற்றும் 30-05-2025, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று (29-05-2025) மேற்கு வங்காளம், வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு-மத்திய வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், இதர தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று (29-05-2025), தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு கொங்கன் - கோவா, கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on May 29, 2025 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

