ஏப்ரல் 28, அயனாவரம் (Chennai News): சென்னையில் உள்ள அயனாவரம் (Ayanavaram, Chennai), நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளம்பெண் அருணா சீனிவாசன் (வயது 22). இவர் சூளையில் வசித்து வந்த நிலையில், இந்திய உணவுகழக பணியாளர் ஆவார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அருணா கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், அவரை கொலை செய்தது அம்பத்தூரில் உள்ள பி.பி.ஓ நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளர் தினேஷ் குமார் என்பது அம்பலமானது. இவர் தனது குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தினேஷின் தந்தைக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சம்பவத்தன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, தினேஷ் குமார் வீட்டில் தனியே இருந்த நிலையில், அருணாவை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார். தினேஷின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்ற அருணா மாலை வரையில் அங்கேயே இருந்துள்ளார்.
மாலை நேரத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அருணா கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது. கொலைக்கு பின்னர் உடலை மறைக்க மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு கொண்டு வந்து காரில் ஏற்ற சிரமப்பட்ட தினேஷ், பக்கத்து வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்தும் இருக்கிறார். Ponniyin Selvan 2: சதிச்செயல்களை சுற்றி சோழம்.. இறுதியில் நந்தினி, ஆதித்த கரிகாலனுக்கு நடந்தது என்ன?; பொன்னியின் செல்வன் 2..!
சடலத்தை காருக்குள் ஏற்றி பயணிக்க முற்பட்டபோது, அப்பகுதியில் கோவில் திருவிழா காரணமாக மக்கள் திரளாக இருந்துள்ளனர். இதனால் காரை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற தினேஷ், அங்கிருந்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர், தாமதமாக வந்த தலைமை செயலக காவல் துறையினர், காரில் சேலைத்துணியில் உடல் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காரின் கதவை திறந்து பார்க்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தினேஷ் குமாரை தேடியபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
தற்போது அவருக்கு எதிராக 8 ஆண்டுகள் கழித்து ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பித்துள்ள அதிகாரிகள், விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். தினேஷ் குமார் கைது செய்யப்பட்டால் மட்டுமே அருணா சீனிவாசனின் கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.