வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு பொளந்துகட்டப்போகும் கனமழை.. மக்களே கவனமா இருங்க.!

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு பொளந்துகட்டப்போகும் கனமழை.. மக்களே கவனமா இருங்க.!
Chennai Weather Rains (Photo Credit: @chennaiweather X)

மே 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். இன்று (27-05-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. Gold Silver Price: தங்கம் விலை இன்று.. 72,000ஐ நெருங்கும் தங்கம்.. மெல்லமெல்ல உயர்வு.!

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை (28-05-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 29-05-2025 முதல் 30-05-2025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

சென்னையில் இன்று (27-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று 27-05-2025 முதல் 31-05-2025 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

இன்று (27-05-2025) தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை 28-05-2025 முதல் 30-05-2025 வரை தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

இன்று 27-05-2025 முதல் 31-05-2025 வரை தென்மேற்கு - மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு - மத்தியகிழக்கு அரபிக்கடல், கொங்கன்- கோவா, கர்நாடக- கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on May 27, 2025 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).