அக்டோபர் 15, பனமரத்துப்பட்டி (Salem News): இரண்டு குடும்பத்தினர் இடையே நிலவிய நிலம் தொடர்பான தகராறு காரணமாக 17 வயதுடைய சிறுமி மற்றும் 15 வயதுடைய சிறுவன் கொலை (Salem Brother Sister Killed) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நிலத்தகராறு:
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி கிராமம், ஒடுவன்கரடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 17 வயதுடைய நவீனா என்ற மகள், 15 வயதுடைய சுகன் என்ற மகன் இருக்கின்றனர். ராஜா விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள குள்ளப்பநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுமி நவீனா 12ம் வகுப்பும், சுகன் 10ம் வகுப்பும் பயின்று வருகிறார்கள். ராஜாவின் வீட்டருகே வசித்து வரும் உறவினர் தனசேகர் என்பவருடன், ராஜாவின் குடும்பத்திற்கும் - தனசேகரன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலப்பிரச்சனை குறித்து இருதரப்பு கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
சிறார்கள் வெட்டிக்கொலை:
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுவன், சிறுமி இருவரும் மாலை வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், ஒடுவன்கரடு பகுதியில் இவர்களை வழிமறித்த தனசேகர், இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றதாக தெரியவருகிறது. இவர்களுடன் இருந்த ராஜாவுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. Stray Dogs Dies: மின்சாரம் தாக்கி 3 தெருநாய்கள் பரிதாப பலி; நெஞ்சை ரணமாக்கும் நேரடி காட்சிகள்..!
குற்றவாளி தப்பியோட்டம்:
அரிவாளால் வெட்டப்பட்டதில் கழுத்து அறுக்கப்பட்டு சிறுவன், சிறுமி இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா காயம் அடைந்தார். கொலை சம்பவத்தை அரங்கேற்றிய தனசேகர், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சுகன், நவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை:
மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பனமரத்துப்பட்டி காவல்துறையினர், தலைமறைவான தனசேகருக்கு வலைவீசி இருக்கின்றனர். சேலத்தில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், உள்ளூரில் பதற்ற சூழல் நிலவுவதால், பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறார்கள் கொலை செய்யப்பட்டதை அறிந்த உறவினர்கள், மருத்துவமனையில் குவிந்து கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.