வானிலை: மக்களே உஷார்.. 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்று வருகிறது.

வானிலை: மக்களே உஷார்.. 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Tamilnadu Rains (Photo Credit: @NewsMobileIndia X)

நவம்பர் 29, சென்னை (Chennai News): நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (29-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நாகபட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே 30-ஆம் தேதி மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வானிலை (Weather):

எனவே இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. கொடூர சம்பவம்..!

தரைக்காற்று எச்சரிக்கை:

இன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இன்றும் நாளையும் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy):

(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).