வானிலை: 26 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. 3 மணிநேரத்திற்கு உஷார்.. வானிலை மையம் அலர்ட்.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 11:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும். நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து செல்லக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை (Today Weather):
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. நாளைய வானிலை: தமிழகத்தில் தீவிரமாகும் பருவமழை.. மிக கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.!
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Oct 22, 2025 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

