வானிலை: புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.!
Tamilnadu Rains (Photo Credit : @TamilTheHindu X)

அக்டோபர் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, இன்று காலை 05:30 மணி அளவில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

வலுவடையும் மோந்தா புயல்(Montha Cyclone):

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி காலை தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளைய வானிலை: சுத்து போடும் மேகங்கள்.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்ட மக்களே கவனம்.!

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Oct 26, 2025 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).