Shefali Jariwala: ஊசியால் வந்த வினை.. நடிகை உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.!
மறைந்த நடிகை ஷெஃபாலி வயதாவதை தடுப்பதற்காக சம்பவத்தன்று மதியம் ஊசி ஒன்றை செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. . இதன் காரணமாகவே நடிகை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் 30, மும்பை (Cinema News Tamil): பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கான்டா லகா கேர்ள் என்ற பாடலில் நடித்து பிரபலமடைந்த நிலையில், இவரின் சிஸ்லிங் ரீமிக்ஸ் பாப் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் முஜிசே ஷாதி கரோங் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் 13 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். மேலும் நாச் பாலியேவின் சீசன் 5 மற்றும் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
திடீர் மாரடைப்பு :
இந்நிலையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஷெஃபாலி ஜரிவாலா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் தனது வீட்டில் இருந்தபோது நடிகைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவரது கணவர் பராக் தியாகி அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 47 வயதேயான நடிகை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Actress Shefali Jariwala Dies: பிக்பாஸ் நடிகை திடீர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள்.!
நடிகை மரணத்தில் டுவிஸ்ட் :
முதற்கட்ட விசாரணையில், மறைந்த நடிகை ஷெஃபாலி வயதாவதை தடுப்பதற்காக சம்பவத்தன்று மதியம் ஊசி ஒன்றை செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து உடலில் நடுக்கம் ஏற்படவே, அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே நடிகை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேற்படி காவல்துறையினர் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே நடிகையின் மரணத்திற்கான காரணம் தெரியுமென காவல்துறையினர் கூறியுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

