Shakti Dubey: யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம்.. யார் இந்த சக்தி துபே?.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த உ.பி பெண்..!

2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சக்தி துபே என்ற பெண் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Shakti Dubey: யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம்.. யார் இந்த சக்தி துபே?.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த உ.பி பெண்..!
Shakti Dubey UPSC 1st Rank (Photo Credit: @pramod9411 X)

ஏப்ரல் 22, டெல்லி (Delhi News): மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (UPSC Exam 2024) சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில் 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் நிலைத் தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வும், இந்த ஆண்டு ஜனவரி- ஏப்ரல் வரை நேர்காணலும் நடந்தது. இந்த தேர்வு எழுதியவர்களில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, இறுதி முடிவுகள் வெளியான நிலையில், சக்தி துபே (Shakti Dubey) என்ற பெண் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ஹர்ஷிதா கோயல் 2வது இடத்தையும், டோங்ரே அர்ச்சித் பராக் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். யுபிஎஸ்சி-யின் https://upsconline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள், தரவரிசை பட்டியலை காணலாம். UPSC Result 2024: யுபிஎஸ்சி 2024 தேர்வு முடிவுகள்; சாதனை படைத்த தமிழக மாணவர்கள்.. முதல்வர் பாராட்டு..!

யார் இந்த சக்தி துபே?

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜை (Prayagraj) சேர்ந்த சக்தி துபே (வயது 28), அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி பட்டமும், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பின்னர், யுபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் கனவோடு, இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேர்வுக்கு தயாராகியுள்ளார். அந்தவகையில், அரசியல் அறிவியலையும் சர்வதேச உறவுகளையும் விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்தார்.

சக்தி துபே சாதனை:

யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சக்தி துபே கூறுகையில், 'எனது தந்தை காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். நான் சிறுவயதில் அவர் பணி செய்வதை பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஆரம்பத்தில் இது ஏதோ வேலை என்றுதான் நினைத்தேன். ஆனால், பிறகுதான் இது கடமை என்பதை உணர்ந்தேன். காவலரோ அல்லது அவர்களது வாகனமோ ஒருவரை பாதுகாப்பாக உணர வைக்கிறது என்பதை பிறகுதான் உணர்ந்தேன். சிறிய பதவியில் இருந்தாலும் யாருக்காவது நல்லதொரு மாற்றத்தை தரலாம் என நினைத்தேன். பொதுமக்களுக்கு அதிகம் சேவை செய்ய விரும்பினேன். இதன் காரணமாகவே, யுபிஎஸ்சி தேர்வை தேர்வு செய்தேன். எனக்கு அரசு வேலை மீது அதிகமாக ஆர்வம் இருந்தது. எனது வெற்றி பயணத்திற்கு எனது பெற்றோரும் ஊக்குவித்தனர். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).