Sivachandran TN UPSC Topper | CM MK Stalin File Pic (Photo Credit: @ramaniprabadevi X)

ஏப்ரல் 22, சென்னை (Chennai News): மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (UPSC Exam 2024) சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் மற்றும் மத்திய அரசு குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு 1,056 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டமாக நடத்தப்பட்டது. UPSC Result 2024: யுபிஎஸ்சி 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு; பெண் முதலிடம் பிடித்து சாதனை..!

தமிழக மாணவர் சாதனை:

தற்போது, இறுதி முடிவுகள் வெளியான நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே (Shakti Dubey) என்ற பெண் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ஹர்ஷிதா கோயல் 2வது இடத்தையும், டோங்ரே அர்ச்சித் பராக் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் (Sivachandran) தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மேலும், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முதல்வர் பாராட்டு:

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) வெளியிட்ட பதிவில், "எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர், யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத் தரவரிசையில் முதல்வனாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!இவ்வாறு, தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

யுபிஎஸ்சி-யின் https://upsconline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள், தரவரிசை பட்டியலை காணலாம்.