மே 11, சென்னை (Kitchen Tips): தமிழர்களின் மதிய உணவில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய ஒன்று ரசம். இவை சைவத்தில் தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், பருப்பு ரசம், புளி ரசம் ஆகியனவாகவும், அசைவத்தில் நாட்டுக்கோழி ரசம், நெஞ்செலும்பு ரசம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். நாம் மதிய உணவில் ரசத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும். ரசத்தில் சேர்க்கப்படும் சீரகம், மிளகு ஆகியவை மருத்துவ குணம் உள்ளவை. அந்தவகையில், தேங்காய் பாலை வைத்து ரசம் (Coconut Milk Rasam) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம். Drunken Man Suicide After Killing Family Members: குடிபோதையில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை..!
தேவையான பொருட்கள்:
தேங்காய் - அரை மூடி
தக்காளி, எலுமிச்சம் பழம் - தலா 1
மஞ்சள் தூள் - கால் கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 7 பல்
எண்ணெய், சீரகம், கடுகு, மிளகு - தலா 1 தேக்கரண்டி
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து தேவையான அளவு தேங்காய் பாலை (Thengai Paal Rasam) எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து, மிக்ஸியில் ரசத்திற்கு அரைப்பதற்கு தக்காளி, காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடேற்றி அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, அதனுள் நாம் கலந்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும்.
தேங்காய் பால் ரசத்தை கொதிக்க விடக்கூடாது. லேசாக நுரை வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதன் மேல் கொத்தமல்லியை லேசாக தூவிவிட்டு, கரண்டியை வைத்து நன்கு கலந்து மூடி வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் அருமையான சுவையில் தேங்காய் பால் ரசம் ரெடி.