Tomato Kurma Recipe: இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி குருமா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
சுவையான தக்காளி குருமா ரெசிபி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 05, சென்னை (Kitchen Tips): இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரு புதுவிதமான குழம்பு செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட, வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான குருமா ரெசிபியை இதில் பார்ப்போம். இந்த குருமாவில், தக்காளி, தேங்காய்ப்பால் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், இது ஒரு சத்தான ரெசிபி ஆகும். வெவ்வேறு மசாலாக்களின் கலவையால் ஒரு தனித்துவமான சுவையைத் தரும். எந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், இந்த தக்காளி குருமா (Tomato Kurma) ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். Garlic Rice Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான பூண்டு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் தக்காளியை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து, அதில் தக்காளி துண்டுகளை 5 நிமிடங்கள் போட்டு வேக வைக்கவும்.
- பின்பு தக்காளியை எடுத்து, தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- பின், அதில் அரைத்த தக்காளி விழுது, சோம்புத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கிளறவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- வதங்கிய மசாலாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாகக் கிளறவும். மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொதித்த குருமாவை இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி குருமா ரெடி.
(The above story first appeared on LatestLY on Dec 05, 2024 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

