Vijayadashami 2025: ஜெயம் தரும் விஜயதசமியில் பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. துர்க்கையின் அருளை பெற கட்டாயம் செய்யுங்க.!
Vijayadashami 2025: 2025 ஆம் ஆண்டு விஜயதசமி எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , துர்க்கையை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
அக்டோபர் 01, சென்னை (Festival News): நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையாக சரஸ்வதி பூஜை (Saraswati Pooja), ஆயுத பூஜை (Ayudha Puja 2025) மற்றும் விஜயதசமி (Vijayadashami) நடைபெறுகின்றன. நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் நடைபெறும் போது, துர்க்கை அம்மனுக்கு மூன்று நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் மூன்று நாட்களுக்கு லட்சுமி வழிபாடு நடக்கிறது. இறுதியாக மூன்றாவது கட்டத்தில் சரஸ்வதி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது. தனி மனிதனின் வாழ்க்கையில் கல்வி மிக முக்கியமானது என்பதால் சரஸ்வதி தாய் அறிவையும், ஞானத்தையும் வழங்கும் பொருட்டு பூஜை நடத்தப்படும்.
ஞானத்தை அருளும் சரஸ்வதி பூஜை :
மனிதனுக்கு ஞானம், வீரம், செல்வம் ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடுவதின் நோக்கமாகும். சக பெண் தெய்வங்களிடமிருந்து பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்ட நாளில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி திங்கட்கிழமையன்று தொடங்கிய நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 2 அன்று நிறைவடைகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி தேவியை வணங்கும் பொருட்டு அக்டோபர் 1ஆம் தேதியான இன்று மஹா நவமியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. Saraswati Puja 2025: சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.!
ஆயுத பூஜை முக்கியத்துவம் :
சரஸ்வதி பூஜை நாளில் ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மேற்கொள்ளும் புதிய முயற்சி அனைத்தும் வெற்றியை தரும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அசுரனை அழிப்பதற்காக பெண் தெய்வங்களிடமிருந்து அன்னை ஆயுதங்களை பெற்று பூஜை செய்வார். அந்த ஆயுதங்கள் தான் மக்களை அசுரனிடம் இருந்து காப்பாற்ற அம்பிகை உபயோகப்படுத்தினார். இதன் காரணமாகவே நம் வாழ்வாதாரத்திற்கு உபயோகிக்கும் அனைத்து கருவிகளையும், ஆயுதங்களையும் பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை அமைந்துள்ளது.
விஜயதசமியின் முக்கியத்துவம் :
2025 ஆம் ஆண்டுக்கான விஜயதசமி நாளை அக்டோபர் 2-ஆம் தேதி (புரட்டாசி 16) வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாளான விஜயதசமி, தசரா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் துர்கா தேவி மகிஷாசுரனை ஒன்பது நாட்கள் போராடி வதம் செய்து வெற்றி பெற்றதை நினைவுகூரும் நாளாகும். அதேபோல் ராமாயணத்தில் ராமர் ராவணனை வீழ்த்தி வெற்றி பெற்றதும் விஜயதசமி அன்றுதான் என கூறப்படுகிறது. மேலும் மகாபாரதத்தில் தங்களது அரசையும், செல்வங்களையும் இழந்த பாண்டவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அனைத்தையும் கைப்பற்றியதும் விஜயதசமி நாளில்தான் என கூறப்படுகிறது. இதனால் தீமையை வென்று நன்மை வெற்றி பெறும் நாளாக விஜயதசமி கருதப்படுகிறது.
விஜயதசமியில் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் ( Vijayadashami Puja Time) :
விஜயதசமியில் தசமி திதி மாலை 03:45 மணி வரை நீடிப்பதால் காலை நேரம் வழிபாட்டிற்கு மிகவும் சிறந்தது. காலை 7:45 மணி முதல் 8.50 மணி வரையிலும், 10:40 மணி முதல் 12:00 மணி வரை பூஜை செய்ய உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. மாலை வழிபாட்டினை விரும்பும் பக்தர்கள் 06:00 மணிக்கு விளக்கேற்றி வழிபடலாம். இந்நாளில் துர்கா தேவியின் அருளைப் பெற மனமுருகி தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வது மிக முக்கியம்.
விஜயதசமி பூஜை வழிமுறைகள் (Vijayadashami Vazhipadu) :
- முதலில் வீட்டில் உள்ள புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் அனைத்தையும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
- பின் திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு துர்கா தேவியின் திருவுருவ படத்தை வணங்கலாம்.
- கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது விடாமுயற்சியை கடைபிடித்து வெற்றி காண துர்கா தேவியின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
விஜயதசமி பூஜையில் கவனிக்க வேண்டியவை (Vijayadashami Celebration Methods Important Things):
- பூஜை நடைபெறும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.
- வழிபாட்டு நேரத்தில் கோபம், வாக்குவாதம், எதிர்மறை எண்ணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
- தியானம் மூலம் மனதை ஒருமைப்படுத்தி கடவுளை மனதார நினைத்து விருப்பங்கள் நிறைவேற பிரார்த்தனை செய்யவும்.
- இந்நாளில் கல்வி, தொழில் தொடர்பான பொருட்களுக்கு பூஜை செய்வது வெற்றிக்கும், முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.
விஜயதசமி நாள் புதிய துவக்கங்களுக்கும், கல்வி மற்றும் பணியில் முன்னேற்றத்திற்கும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நன்னாளில் குழந்தைகளுக்கான பள்ளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

