Saraswathi Pooja 2025 | சரஸ்வதி பூஜை 2025 (Photo Credit : Pixabay / @iVenpu X)

செப்டம்பர் 30, சென்னை (Festival News): நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையாக சரஸ்வதி பூஜை (Saraswati Pooja) மற்றும் ஆயுத பூஜை (Ayudha Puja 2025) நடைபெறுகின்றன. நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் நடைபெறும் போது, துர்க்கை அம்மனுக்கு மூன்று நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் மூன்று நாட்களுக்கு லட்சுமி வழிபாடு நடக்கிறது. இறுதியாக மூன்றாவது கட்டத்தில் சரஸ்வதி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது. தனி மனிதனின் வாழ்க்கையில் கல்வி மிக முக்கியமானது என்பதால் சரஸ்வதி தாய் அறிவையும், ஞானத்தையும் வழங்கும் பொருட்டு பூஜை நடத்தப்படும்.

ஞானத்தை வழங்கும் சரஸ்வதி பூஜை :

மனிதனுக்கு ஞானம், வீரம், செல்வம் ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடுவதின் நோக்கமாகும். சக பெண் தெய்வங்களிடமிருந்து பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்ட நாளில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அசுரனை அம்பிகை வதம் செய்து வெற்றிவாகை சூடியதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி திங்கட்கிழமையன்று தொடங்கிய நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 2 அன்று நிறைவடைகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி தேவியை வணங்கும் பொருட்டு அக்டோபர் 1ஆம் தேதியான நாளை மஹா நவமியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜையின் முக்கியத்துவம் :

2025 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை புதன்கிழமை வருவதால் 09:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் பூஜை செய்வது நல்லது. சரஸ்வதி பூஜை நாளில் ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மேற்கொள்ளும் புதிய முயற்சி அனைத்தும் வெற்றியை தரும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அசுரனை அழிப்பதற்காக பெண் தெய்வங்களிடமிருந்து அன்னை ஆயுதங்களை பெற்று பூஜை செய்வார். அந்த ஆயுதங்கள் தான் மக்களை அசுரனிடம் இருந்து காப்பாற்ற அம்பிகை உபயோகப்படுத்தினார். இதன் காரணமாகவே நம் வாழ்வாதாரத்திற்கு உபயோகிக்கும் அனைத்து கருவிகளையும், ஆயுதங்களையும் பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை அமைந்துள்ளது.

சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை செய்வதற்கான நல்ல நேரம் (Saraswati Puja & Ayudha Puja Time) :

2025 ஆம் ஆண்டுக்கான ஆயுத பூஜை பண்டிகை (Ayudha Puja Date) அக்டோபர் மாதம் 01-ஆம் தேதி காலை 09:15 முதல் 10:25 மணி வரை கொண்டாடப்படுகிறது. அதன்பின் 10:45 முதல் 11:45 மணி வரை சரஸ்வதி பூஜையை கொண்டாடலாம். மாலை 4:45 மணி முதல் 05:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் 06:00 மணிக்கு மேல் 07:30க்குள் பூஜை செய்யலாம். இந்த நேரங்கள் இறைவனை வணங்க சிறந்த நேரங்களாகவும் கருதப்படுகின்றன. பக்தர்கள் மேல் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல நேரங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை கொண்டாடலாம். சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்க விளக்கேற்றி மனமுருகி வழிபட்டாலே நீங்கள் எண்ணிய விஷயங்கள் ஈடேறும்.

சரஸ்வதி பூஜை வழிமுறைகள் (Saraswathi Pooja Vazhipadu):

  • வீட்டில் உள்ள புத்தகங்கள், கல்வி சார்ந்த பொருட்கள், உபகரணங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
  • பின் திருநீறு, சந்தனம், குங்குமம் திலகமிட்டு புத்தகங்கள் மற்றும் சரஸ்வதி தேவியின் திருவுருவ படத்தை அலங்கரிக்க வேண்டும்.
  • சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெள்ளை மலர்கள், வெள்ளை ஆடை, பால் சார்ந்த நைவேத்தியங்களான காய்ச்சிய பால், பால் பாயசம், சுண்டல் வைத்து படைக்கலாம்.
  • குழந்தைகள் மற்றும் மாணவர்கள் புத்தகங்களை வைத்து விளக்கேற்றி வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • சரஸ்வதி தேவியின் மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யலாம்.

சரஸ்வதி பூஜையில் கவனிக்க வேண்டியவை (Saraswati Pooja Celebration Methods Important Things):

  • பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.
  • பூஜை நேரத்தில் கோபப்படுவது, வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
  • மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து கடவுளை மனதார நினைத்து எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டலாம்.
  • சரஸ்வதி பூஜை தினத்தில் கல்வி சார்ந்த பொருட்களுக்கு பூஜை செய்வதால் கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் கிடைக்கும்.