ஜனவரி 28, மலேசியா (Sports News): ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை (ICC U19 Women's T20 WC 2025) தொடர், மலேசியாவில் ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜனவரி 28) இந்தியா - ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் மோதின. இப்போட்டி, கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ICC U19 Women's T20 WC 2025: யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2025; 8வது போட்டி தொடங்கும் தேதி, நேரம் மற்றும் மைதானம்.. முழு விவரம் இதோ..!
கொங்காடி த்ரிஷா அதிரடி:
அதன்படி, களமிறங்கிய கொங்காடி த்ரிஷா (INDW U19 Gongadi Trisha) மற்றும் கமலினி கூட்டணி அதிரடியில் மிரட்டியது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 80 பந்துகளில் 147 ரன்கள் குவித்தது. கமலினி 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய த்ரிஷா 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து ஆடிய அவர் 53 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் மகளிர் U19 உலகக் கோப்பை தொடரில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
இந்தியா வெற்றி:
இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கொங்காடி த்ரிஷா 110 ரன்கள் அடித்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 14 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய கொங்காடி த்ரிஷா ஆட்டநாயகி விருதை பெற்று சென்றார்.