SLW Vs PAKW: இலங்கை மகளிர் - பாகிஸ்தான் மகளிர் 25வது லீக் போட்டி.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 25வது லீக் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.
அக்டோபர் 24, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தகுதிபெறவில்லை. இந்நிலையில், இன்று (அக்டோபர் 24) இலங்கை மகளிர் அணி - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 25வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது. SLW Vs PAKW, Toss: இலங்கை மகளிர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. முதல் வெற்றியை பெறுமா பாகிஸ்தான் மகளிர் அணி..?
இலங்கை மகளிர் எதிர் பாகிஸ்தான் மகளிர் (Sri Lanka Women Vs Pakistan Women):
போட்டி தொடங்குவதற்கு முன்பு, சுமார் 3 மணிநேரம் பெய்த கனமழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து, டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. மீண்டும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நடப்புத் தொடரில், வெற்றி பெறாத ஒரே அணியாக பாகிஸ்தான் மகளிர் அணி உள்ளது.
இலங்கை மகளிர் அணி:
விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, டெவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.
பாகிஸ்தான் மகளிர் அணி:
முனீபா அலி, ஒமைமா சொஹைல், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), எய்மான் பாத்திமா, சையதா அரூப் ஷா, ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.
(The above story first appeared on LatestLY on Oct 24, 2025 08:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

