Chess Olympiad 2024: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; தொடர்ந்து 6-வது சுற்றில் இந்தியா வெற்றி..!
ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 17, புடாபெஸ்ட் (Sports News): செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad)போட்டியில் தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஹங்கேரி (Hungary) தலைநகர் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகின்றது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று (செப்டம்பர் 16) அரங்கேறிய 6-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, அர்மேனியாவை சந்தித்தது. இதில், ஒரு ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh), அர்மேனியாவின் டேனியலின் எலினாவை தோற்கடித்தார். மேலும் ஹரிகா, வைஷாலி, தானியா தங்களது ஆட்டங்களில் ‘டிரா’ செய்தனர். MCC-Murugappa Gold Cup Hockey Tournament 2024: 95-வது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி.. எங்கே? எப்போது? முழு விவரம் உள்ளே..!
6-வது வெற்றி:
இதன் முடிவில் இந்தியா அர்மேனியாவை வீழ்த்தி தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. மறுபுறம் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, ஹங்கேரியை சந்தித்தது. இதில், கருப்புநிற காய்களுடன் ஆடிய தமிழக வீரர் குகேஷ் டி (Gukesh D) , ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் ராப்போர்ட் ரிச்சர்ட்டுடன் 44-வது காய் நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா (Praggnanandhaa) பீட்டர் லெகோவுடன் டிரா செய்தார். மற்ற 3 இந்திய வீரர்களின் ஆட்டமும் நீண்ட நேரம் நீடித்தது. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.
வரலாற்று சாதனை:
வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி (Arjun Erigaisi) 4-வது இடத்திலும் மற்றும் குகேஷ் டி 5-வது இடத்திலும் உள்ளனர். எரிகைசி 2788.1 புள்ளிகளையும், குகேஷ் 2775.2 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் 2 இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதில், மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.