DD Vs CSG: சேப்பாக் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. திண்டுக்கல் அணி சொதப்பல்..!
2025 டிஎன்பிஎல், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 14வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜூன் 16, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. DD Vs CSG: கேப்டன் அபராஜித் அரைசதம் விளாசல்.. திண்டுக்கல் அணி வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு..!
திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Dindigul Dragons Vs Chepauk Super Gillies):
இந்நிலையில், இன்று (ஜூன் 16) திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (DD Vs CSG, Match 14) அணிகள் மோதின. ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு தொடக்க வீரர்கள் கே ஆஷிக் மற்றும் மோகித் ஹரிஹரன் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அடுத்து வந்த ஜெகதீசன் 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சற்று அதிரடியாக தொடங்கிய விஜய் சங்கர் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நிதானமாக விளையாடிய கேப்டன் பாபா அபராஜித் 38 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில், இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சுனில் கிருஷ்ணா 18 பந்தில் 32* ரன்கள் அடித்தார். இதன்மூலம், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் அடித்தது. திண்டுக்கல் அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
சேப்பாக் அணி வெற்றி:
இதனையடுத்து, திண்டுக்கல் அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்தில் ஷிவம் சிங் 13 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த பாபா இந்திரஜித், கேப்டன் அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தார். அஸ்வின் 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடிய பாபா இந்திரஜித் 73 ரன்களில் போல்ட் அவுட்டானார். அடுத்து வந்த விமல் குமார், கார்த்திக் சரண் என அடுத்தடுத்து வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் அடித்தது. இதன்மூலம், சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.