ZIM Vs SA 2nd Test, Day 3: தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே.. நிக் வெல்ச் அரைசதம் விளாசல்..!
ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் அடித்துள்ளது.
ஜூலை 08, புலவாயோ (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில், முன்னணி வீரர்களான கேப்டன் பவுமா, மார்க்கரம், ரபாடா, யான்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்திய கேசவ் மகாராஜ், காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். இதனால், 2வது டெஸ்ட் போட்டியில் வியான் முல்டர் அணியை வழிநடத்துகிறார். முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி (ZIM Vs SA 2nd Test) நேற்று முன்தினம் (ஜூலை 06) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ZIM Vs NZ Test Series 2025: ஜிம்பாப்வே டூர்.. நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..!
ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா (Zimbabwe Vs South Africa):
அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 626 ரன்கள் அடித்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் வியான் முல்டர் 334 பந்தில் 367* ரன்கள் (49 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து மிகப் பெரிய சாதனை படைத்தார். டேவிட் பெடிங்ஹாம் 82, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 72 ரன்கள் அடித்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு முதல் பந்தில் டகுட்ஸ்வானாஷே கைடானோ டக் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 83* ரன்கள் அடித்தார். இதன்மூலம், ஜிம்பாப்வே அணி 456 ரன்கள் பின்னிலையில் இருந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி பாலோ ஆன் கொடுத்தது.
போராடும் ஜிம்பாப்வே:
இதன்பின்னர், களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிதானமாக விளையாடியது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், ஜிம்பாப்வே அணி 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் அடித்தது. இந்நிலையில், இன்று ஜிம்பாப்வே அணி 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. நிதானமாக விளையாடி வந்த டகுட்ஸ்வானாஷே கைடானோ 40 ரன்களில் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்ஸ் 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் 313 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நிக் வெல்ச் அரைசதம் (53* ரன்கள்) அடித்து அசத்தினார். கேப்டன் எர்வின் 21* ரன்களுடன் களத்தில் உள்ளார்.
(The above story first appeared on LatestLY on Jul 08, 2025 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

