Pallikaranai Shocker: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளைஞர் ஆணவக்கொலை; சாதி மறுப்பு காதல் திருமணத்தால் பயங்கரம்.!
கடந்த 7 ஆண்டுகளாக காதல், 4 மாதங்களுக்கு முன் சுயமரியாதை திருமணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய பெண்மணியின் காதல் கணவர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
பிப்ரவரி 26, பள்ளிக்கரணை (Chennai Crime News): சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷர்மிளா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆத்திரம் தீராமல் இருந்த பெண்ணின் சகோதரர்: பெண் தனது பெற்றோரின் முடிவை எதிர்த்து சுயமரியாதை திருமணம் செய்து பிரவீனை கரம்பிடித்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லாத குடும்பத்தினர் கோபம் தணிந்து வந்தாலும், பெண்ணின் சகோதரருக்கு ஆத்திரம் தீரவில்லை.
5 பேர் கும்பலால் வெட்டிக்கொலை: இந்நிலையில், சம்பவத்தன்று மனைவிக்கு சிக்கன் ரைஸ் வாங்க சென்றவர், அங்குள்ள தனியார் பார் முன்பு கும்பல் ஒன்றால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சென்ற பள்ளிக்கரணை காவல் துறையினர், பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். WhatsApp Investment Scam: வாட்ஸப்பில் ஆசையாக வலைவிரித்து ரூ.8 இலட்சம் மோசடி; சீன நபருக்கு அனுப்பட்ட ரூ.15 கோடி.. 4 பேர் கைது.!

பார் வாசலில் நடந்த படுபயங்கரம்: விசாரணையில், ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், கூட்டாளிகள் ஸ்டீபன், ஸ்ரீராம், ஜோதி லிங்கம், அசோக் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. தங்கையின் திருமணத்தில் விருப்பம் இல்லாத தினேஷ், பிரவீனின் நண்பரான ஸ்ரீராமிடம் பேசி தனியார் பாருக்கு வரவழைத்து கொலையை அரங்கேற்றி இருக்கிறார். பிரவீன் தனது வேறொரு இரண்டு நண்பர்களுடன் வந்தபோதிலும், அவர்களை விரட்டிவிட்டு கொலை நடந்துள்ளது.
கயவர்கள் கைது: இந்த சம்பவத்தில் பிரவீன் ஷியாம் என்பவரின் கொலை வழக்கில், ஷியாமின் ஆதரவாளர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்த விபரத்தை அறிந்த தினேஷ், ஷியாமின் கூட்டாளிகளை நேரில் சந்தித்து பேசி கொலை திட்டத்தை அரங்கேற்ற வழிவகை செய்துள்ளார். விசாரணைக்கு பின்னர் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர், மாம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த கயவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளிப்பருவத்தில் இருந்து ஷர்மிளா பிரவீனை காதலித்து கரம்பிடித்து இருக்கிறார். இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து, 4 மாதங்களுக்கு முன்பு கரம்பிடித்து இருக்கின்றனர். இந்த தருணத்தில் தான் கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

