AIADMK BJP Alliance: தாமரையுடன் இணைந்த இலை.. கூட்டணி சாத்தியமானது ஏன்? தமிழக அரசியலில் மெகா திருப்பம்.!

மாநில அரசியலில் சில காலங்களில் எதிர்மறை கருத்துக்களுடன் செயல்பட்டு வந்த பாஜக - அதிமுக கட்சிகள், மீண்டும் கூட்டணியில் இணைந்து இருக்கிறது.

AIDMK BJP Alliance 2025 (Photo Credit: @EPSTamilnadu / @AmitShah X)

ஏப்ரல் 11, கிண்டி (Chennai News): தமிழ்நாடு அரசியல் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஜெயலலிதா, கலைஞரின் மறைவுக்கு பின்னர் பல்வேறு திருப்பங்களை சந்தித்துவிட்டது. இதில் அதிமுக 2021 சட்டப்பேரவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து எதிர்கொண்டது. மக்களின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்தாலும், அதிருப்தி அலையில் மிகப்பெரிய வெற்றியை சூடி ஆட்சிக்கு வந்த திமுக மக்களிடம் ஆதரவு/எதிர்ப்பு என இரண்டு கருத்துக்களையும் ஓராண்டிலேயே எதிர்கொண்டது. பின் 2024 மக்களவை தேர்தலும் வந்துவிட்டது. இதற்கிடையில் 2021ல் தேர்தலை இணைந்து எதிர்கொண்ட அதிமுக, பாஜக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டது. மாநிலத்தில் யார் எதிர்க்கட்சி? என்பதில் தொடங்கிய பிரச்சனை இருதரப்பு கருத்து மோதலை உண்டாக்கியது. இதனால் 2024 மக்களவை தேர்தலை அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என தனியே எதிர்கொண்டதால் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி மக்களவை தேர்தலிலும் கிடைத்தது.

பாடம் சொல்லித்தந்த 2024 மக்களவைத் தேர்தல்:

அதிமுக, பாஜக உட்பட திமுக எதிர்ப்பு கட்சிகளுக்கு தொடர் தோல்வி கிடைத்து வந்தது. இதனால் 2026 மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்யப்போகிறது? அதிமுகவின் நிலைப்பாடு என்ன? பாஜகவை தன்வசப்படுத்துமா? அதிமுகவின் கோரிக்கை என்ன? என அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்புடன் மறைமுகமாக நடந்து வந்தது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி பிரிந்து சென்றாலும், அவர்களின் கொள்கை அதிமுகவை மீட்டெடுப்பது. அதேபோல, இருவரும் தங்களின் தரப்புக்கு சொந்த தொகுதியில் அரசியலில் களமிறங்கினாலும், ஒன்றிணைந்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. மாறாக தனியாக இருந்தால் மிகப்பெரிய அளவில் மீண்டும் வெற்றிவாய்ப்பை தவறவிடநேரிடும் என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உறுதி செய்துவிட்டன. Tamil Puthandu 2025: 2025 தமிழ் புத்தாண்டை எப்படி சிறப்பிக்கலாம்? அசத்தல் வாழ்த்துச் செய்தி.. உங்களுக்கான டிப்ஸ் இதோ.! 

AIADMK BJP Alliance 2025 (Photo Credit: @AmitShah X)

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக இணைவு:

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட அண்ணாமலையின் பேச்சுக்கள் முக்கிய காரணமாக இருந்தது. பாஜகவை வளர்ப்பதில் அண்ணாமலை தீவிரமாக தனது கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டாலும், கூட்டணி விஷயத்தில் அதிமுகவுடன் இணக்கமான சூழலை கடைபிடிக்காமல் தனது விஷயத்தில் உறுதியாக இருந்தார். இதனால் இரண்டு கட்சிகளும் கருத்து முரணில் ஈடுபட்டு பின் பிரிந்தது. இந்த பிரிவு 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலித்து இருந்தது. இதனால் இரண்டு கட்சிகளும் வாக்குகள் ரீதியாக பலத்த அடி வாங்கின. இதே நிலை 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர்ந்தால் கட்டாயம் பின்னடைவு என்பதை உணர்ந்துகொண்ட அதிமுக, பாஜக கட்சிகள் இன்று இணைந்துள்ளன. அதேநேரத்தில் அதிமுகவின் உட்கட்சி விஷயமான ஒபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம் உட்பட எந்த விஷயத்திலும் பாஜக தலையிடாது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் பாஜக கூட்டணி என அமித் ஷாவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும், பாஜக மாநில தலைவர் பொறுப்பும் நயினார் நாகேந்திரன் வசம் மாறுகிறது.

பாஜக தலைவர் மாற்றமும் - அண்ணாமலைக்கு எதிரான காய் நகர்த்தலும்:

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்ததில் அண்ணாமலையின் பங்கு மிகப்பெரியது. தமிழிசை, எச். ராஜா, எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன் என பல மூத்த தலைவர்களால் முடியாத பல விஷயங்களையும் அண்ணாமலை தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு சாதித்து காட்டினார். இந்த விஷயத்தின் வெற்றி தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு எண்ணிக்கை மற்றும் மோடி தொடர்பான பேச்சுக்கள் வாயிலாக பதிலை தந்தது. அதே நேரத்தில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டும், அதிமுக கடந்த காலத்தில் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்த தென்மாவட்டத்தில் அதிகம் வாழும் குறிப்பிட்ட ஜாதியின் வாக்குகளை பெறவும் பாஜக சரியான வியூகத்துடன் காய் நகர்த்தி நாயனாருக்கு பொறுப்பு வழங்கி அதிமுகவின் கருத்து மோதலுக்கும் தீர்வு கண்டு, அதிமுக வசம் இருந்து எதிர்ப்பால் மடைமாறிய வாக்கை பெற திட்டமும் தீட்டி செயல்படுத்த இருக்கிறது. இதன் வெளிப்பாடாகவே நயினாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. 2026 தேர்தல் ஏற்கனவே திமுக, நாதக, தவெக இடையே போட்டி இருக்கும், இதில் அதிமுக, பாஜக தனித்து நின்றால் ஐமுனை போட்டி நடக்கும் என பேசப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில் 4 முனை போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக என்ன முடிவெடுக்கப்போகிறது? தேமுதிக நிலைப்பாடு என்ன? என்பதுதான் அடுத்த கேள்வி.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement