நவம்பர் 19, சென்னை (Chennai News): கோயம்புத்தூர் மாவட்டம், சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (வயது 15), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், பள்ளியில் கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி (Basketball Tournament) மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் (Gwalior) கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார். Elephant Attack: திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் பலி..!
பின்னர், போட்டியை முடித்துவிட்டு கடந்த நவம்பர் 16-ஆம் தேதி அன்று, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ் (Chicken Rice), பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். ரயில் சென்னை வந்ததும், அவர் எலினாவை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். சிகிச்சை முடிந்த பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவர், அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனே மீட்டு எலினாவை பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரவள்ளூர் காவல்துறையினர், எலினா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.