வானிலை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிபேட்டை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஆகஸ்ட் 13, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை 05:30 மணி அளவில்  மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather) :

இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather) :

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். Breaking: சிறப்பு வகுப்பில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. விழுப்புரத்தில் சோகம்.. கலங்கவைக்கும் வீடியோ.! 

சென்னை வானிலை (Chennai Weather) :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகள் :

இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் :

இன்று தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் :

இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு குஜராத்- கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய வடகிழக்கு - மத்தியகிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Aug 13, 2025 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).