Paruthi Paal: பருத்திப்பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
ஆடு, மாடுகளின் ஊட்டச்சத்துக்களுக்கு பயன்படும் பருத்திப்பால், மனிதர்களின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் முக்கியமான பங்குகளை கொண்டுள்ளது.
டிசம்பர் 12, சென்னை (Kitchen Tips): தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு பானம் பருத்தி பால் (Paruthi Milk) ஆகும். இது பருத்தி கொட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பருத்தி பால் (Paruthi Paal Benefits) மிகவும் சத்து நிறைந்தது. இதில் புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள் மற்றும் சர்க்கரை போன்றவை அதிகமாக உள்ளன. பருத்தி பாலானது சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். முக்கியமாக, இது நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது மிகவும் நல்லது. பால் குடிக்க பிடிக்காதவர்கள் பருத்தி பாலைக் குடிக்கலாம். பருத்தி பால் குடிப்பதால், இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயம் தொடர்பான பிரச்சனைகள், வயிற்று அல்சர் போன்றவற்றை தடுக்கும். இவ்வளவு நன்மைகளைக் கொண்ட பருத்தி பாலை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பருத்தி கொட்டை - 2 கப்
வெல்லம் - 1 கப்
பச்சரிசி - 1 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
சுக்குப் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:
- முதலில் பருத்தி கொட்டையை நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர், கழுவிய பருத்தி கொட்டையை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
- அதேப் போல் பச்சரிசியையும் நீரில் கழுவி, அதையும் இரவு முழுவதும் ஊறு வைக்கவும். பின்பு, மறுநாள் காலையில் மிக்ஸியில் ஊற வைத்த பருத்தி கொட்டை மற்றும் பச்சரிசியை சேர்த்து, நீரை சிறிது ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அரைத்த விழுதை வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டி பால் எடுத்துக்கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் வைத்து 8-10 நிமிடம் தொடர்ந்து கிறவிவிட்டு கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.
- அடுத்து, அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு கிளறி, 4 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதன் பின் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடியை சேர்த்து கிளறிவிட்டு, இறுதியாக கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சத்தான பருத்தி பால் ரெடி.