Chennai Airport: வயிற்றுக்குள் மாத்திரைகள்.. ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் கைது.. சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிரடி.!
இந்த முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் இணைந்து, அரசுத்துறை அதிகாரிகளின் மூலமாக முறியடித்து வருகிறது.
டிசம்பர் 17, விமான நிலையம் (Chennai News): சென்னையில் (Chennai) உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு (Chennai Airport), உலகளாவிய சுற்றுலா பயணிகளும் நேரடியாக வருகை தருகின்றனர். இவ்வாறாக உலக நாடுகளில் இருந்து வருவோர், சிலநேரம் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களிலும் சிக்கிக்கொள்வது தொடர்கிறது. சுங்கத்துறை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க, பல்வேறு முயற்சிகளை கடத்தல் கும்பல் மேற்கொண்டாலும், அதனை எளிதில் கண்டறிந்து அதிகாரிகள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சுற்றுலா பயணி:
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு, இன்று எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபா நகரில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் கென்யா நாட்டினை சொந்தமாக கொண்ட பெண்மணி ஒருவர் பயணம் செய்தார். இவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட நிலையில், அவரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அதில் எந்த விதமான கடத்தல் பொருட்களும் இல்லை.
வயிற்று வலி - ஸ்கேனில் அதிர்ச்சி:
ஆனால், பெண்மணி தனக்கு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் விமான நிலைய வளாகத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, வயிற்றில் மாத்திரை அளவிலான பல பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் வயிற்றில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. வானிலை: பலத்த காற்றுடன் இன்று 6, நாளை 7 மாவட்டங்களில் கனமழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
போதைப்பொருள் கடத்திய பெண் கைது:
விசாரணையில், பெண்மணி ரூ.14.2 கோடி மதிப்பிலான கோகைன் போதை மாத்திரைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. மொத்தமாக 90 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் அளவு 1.424 கிலோ ஆகும். சுற்றுலா விசாவில் அவர் இந்தியா வருகை தந்து, போதைப்பொருளை கடத்தி சிக்கிக்கொண்ட காரணத்தால், NDPS சட்டம், 1985ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கென்யா பெண்மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் யாருக்காக போதைப்பொருளை கடத்தி வந்தார்? அவரிடம் போதைப்பொருளை பெற கட்டாயம் கும்பல் வந்திருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை ரூ.7.6 கோடி மதிப்பிலான கஞ்சா சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் கைப்பற்றப்பட்டது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.