Chennai RMC Update: இன்று 11 மாவட்டங்களில் கனமழை; வெளுத்து வாங்கப்போகும் கடும் வெயில்... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Regional Meteorological Centre, Chennai

மே 11, சென்னை (Regional Meteorological Centre, Chennai): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (10-05-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (11-05-2023) காலை 05:30 மணியளவில் "மோக்கா" புயலாக வலுபெற்று காலை 08:30 மணியளவில் போர் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோமீட்டர் மேற்கு-தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வகிக்கில் மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன் பிறகு நாளை (12-05-2023) மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு 13.05.2023 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 கி.மீ முதல் 150 கி.மீ வேகம் வரை வீசி, 14.05.2023 அன்று ஆளை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். இதனால் 11.05.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றைய கனமழை: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 12 மற்றும் 13ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை விபரம்: வெப்பநிலையை பொறுத்தமட்டில் 11.05.2023 முதல் 15.05.2023 வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் உயரக்கூடும். 14 மற்றும் 15ம் தேதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படும். அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் மவாட்டம் பரமத்தியில் 38 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை நகரம்: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மீனவர்களுக்காக எச்சரிக்கையாக 11 ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்டுகிறது. மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம், மீன்பிடிக்க சென்றிருந்தால் கரைதிரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.