வானிலை: 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மேலும், வரும் 5 நாட்களுக்கு மழைக்கான சாதக சூழல் நிலவி வருகிறது.
செப்டம்பர் 24, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தமட்டில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மணலி பகுதியில் 15 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 11 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரியில் 9 சென்டிமீட்டர் மழையும், மதுரவாயலில் 11 செண்டிமீட்டர் மழையும், வானகரம், மணலி இரண்டாவது மண்டலம் ஆகிய பகுதிகளில் தலா எட்டு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனைத்தவிர்த்து அரியலூர், ராணிப்பேட்டை, மதுராந்தகம், திருவண்ணாமலை, கோயம்பத்தூர், நீலகிரி, வால்பாறை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், செந்துறை, சேத்தியாதோப்பு, கொடுமுடி ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இன்று (Today Weather) சில மாவட்டங்களில் கனமழை:
அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப் பகுதியில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 24ஆம் தேதியான இன்று வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று ஒரு சில இடங்களில் 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரையில் வீசலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. வானிலை: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!
25ம் தேதி முதல் 30ம் தேதி வரை வானிலை:
25ஆம் தேதியை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழையுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று ஒரு சில இடங்களில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசும். 26 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தில் அடுத்து இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக உணரக்கூடும்.
சென்னையின் (Chennai Weather Update) வானிலை:
இதனால் அதிக வெப்பநிலை மற்றும் ஈர்ப்பதம் ஏற்பட்டு, அசௌகரிய சூழலும் உண்டாகலாம். தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானமேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
வங்கக்கடல் & அரபிக்கடலுக்குள் செல்வோருக்கு அறிவுறுத்தல்:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 27ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம். அதே போல, அரபிக்கடல் பகுதிகளில் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்குப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல், கேரள-கர்நாடக கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.