Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்? கிடைத்தது புதிய ஆதாரம்; அசத்தல் விபரம் உள்ளே.!
இதன் வாயிலக செஞ்சிக்கோட்டை வரலாறு தேடலில் புதிய வெற்றி கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 26, செஞ்சி (Viluppuram News): தமிழக வரலாற்றில் புகழ்பெற்ற, பழமையான, வரலாறுகளில் இருந்து மறக்க முடியாத, எதிரிகளால் தகர்க்க முடியாத கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் செஞ்சிக்கோட்டை, ஆனந்த கோன் என்ற தமிழ் மன்னர் சார்பில் கட்டப்பட்டது. தற்போது செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி (Gingee) நகரில் இருக்கிறது. ஆனந்தகிரி என அழைக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை பின்னாளில் கமலகிரி என பெயர் மாறி, தற்போது ராஜகிரி என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில், ராணிக்கோட்டை என அழைக்கப்பட்ட கிருஷ்ணகிரி கோட்டையை, கிருஷ்ணகோன் கட்டியிருந்தார். இதன் பின் மன்னர்களாக இருந்த கோனேரி கோன், கோவிந்த கோன் ஆகியோர் கோட்டையை விரிவுபடுத்தி தங்களது ஆட்சியை மேற்கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து, சுதந்திரத்திற்கு முன்பு வரை வரலாற்றில் பல ஆட்சியாளர்களை செஞ்சிக்கோட்டை கண்டுவிட்டது. ஆங்கிலேயர் மற்றும் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆகியோருக்கு கூட சிம்ம சொப்பனமாக, அவர்களால் பாராட்டப்பெற்ற வலிமைமிக்க, இயற்கை அரண் கொண்ட கோட்டையாகவும் செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது.
வரலாற்று பெருமைமிக்க கோட்டை:
மேற்கூறிய மன்னர்கள் அனைவரும் தந்தை, மகன், பேரன் என அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் கிபி 1200-ல் தொடங்கி 1330 வரை என மொத்தமாக 130 ஆண்டுகள் செஞ்சிக்கோட்டையை மையமாக வைத்து ஆட்சி செய்து வந்தனர். "கர்நாடக ராஜாக்கள் சபிஸ்தார சரித்திரம்" என்ற நூலில் கிபி 1807ஆம் ஆண்டு ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த கர்னல் வில்லியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, செஞ்சியில் வசித்துவந்த நாராயணன் என்பவரால் புத்தகம் ஒன்று எழுதப்பட்டது. செஞ்சிக்கோட்டை சார்ந்த நூல்களில் 5 மன்னர்கள் குறித்த பதிவுகள் இருக்கின்றன. செஞ்சிக்கோட்டையை முதலில் கட்டிய மன்னர்கள் இவர்களே என குறிப்பிடப்பட்டாலும், அதற்கான வரலாற்றுச் சான்றுகள் என்பது இல்லாமல் இருந்தது. ஏனெனில் கோட்டையை அடுத்தடுத்து கைப்பற்றிய பிற்கால மன்னர்கள், ஆதிகாலத்தில் கோட்டையை கட்டிய மன்னர்களின் தடையங்களை அழித்து இருந்தனர். இதனால் உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. Birds Astrology: அடடே.. உங்களின் வீட்டிற்குள் இந்த பறவையெல்லாம் வந்துட்டு போகுதா?.. விஷயம் இதுதானாம்.!
புதிய கல்வெட்டு கண்டெடுப்பு:
இந்நிலையில், செஞ்சிக்கோட்டை தொல்லியல் கழகத்தைச் சார்ந்த லெனின், அன்னமங்கலம் கிராமத்தைச் சார்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் முனுசாமி, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், செஞ்சி பகுதியைச் தேவ குமார், அருண், ஏழுமலை, வரலாற்று ஆசிரியர் வடிவேல் ஆகியோர் தலைமையில் குழுவாகச் சென்று செஞ்சி கிருஷ்ணகிரி கோட்டையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கோட்டையை கட்டியது ஆனந்த கோன், கிருஷ்ண கோன் ஆகியோரின் கல்வெட்டுகள் கிடைக்கப் பெற்றன. இந்த குழுவினர் செஞ்சிக்கோட்டையின் உச்சியில் இருக்கும் ராஜகோபாலசுவாமி கோவில் வாசல்படியில், கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். இதில் "கொநெரி கொன் கொவிந்தன் சத செர் வை" என எழுதப்பட்டிருந்துள்ளது.
5 மன்னர்களால் அமைக்கப்பட்ட கோட்டை:
அதாவது இந்த கல்வெட்டு வாசகத்தை "கோனேரி கோன் கோவிந்தன் சத சேவை" என வாசித்தால் பொருள்படும். கோனேரி மகன் கோவிந்தன் சதா இறைவனை வணங்கிய நிலையில் இங்கு இருக்கிறார், "கோனேரிக்கோன் செய்த சேவை" என்பதை வாசகம் குறிக்கிறது. இந்த கல்வெட்டு வாயிலாக செஞ்சிக்கோட்டையை கட்டியது ஆனந்த கோன், கிருஷ்ண கோன், கோனேரி கோன், கோவிந்த கோன், புலிய கோன் ஆகிய ஐந்து மன்னர்கள் என்பதும் உறுதியாகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆனந்த கோனின் கல்வெட்டுகளும் தேடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு 5 மன்னர்கள் சார்பில் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை, இன்று வரை உள்நாட்டு வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஆர்வலர்களாகவும் கவனிக்கப்படும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. மகாபலிபுரத்திற்கு பின்னர் அதிக வரலாற்று தகவலை கொண்ட கோட்டையாக செஞ்சிக்கோட்டை இருக்கிறது. இதன் வரலாறுகள் வெளிப்படும் பட்சத்தில், செஞ்சிக்கோட்டை குறித்த பல்வேறு தகவல்கள் எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய வரலாற்று பாடமாகவும் வாய்ப்புகள் உள்ளன