Ayyappan Viratham 2024: "சாமியே சரணம் ஐயப்பா".. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விரத முறைகள்.., முழு விவரம் உள்ளே..!
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விரத முறைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நவம்பர் 16, சபரிமலை (Festival News): கார்த்திகை மாதம் இன்று (நவம்பர் 16) துவங்கி விட்டது. கார்த்திகை முதல் நாள் என்றதுமே சபரிமலை ஐயப்பன் (Ayyappan) தான் நினைவிற்கு வருவார். இந்த 2024-ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15-ஆம் தேதியான நேற்று, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 16-ஆம் தேதி, அதாவது கார்த்திகை முதல் தேதியான இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சபரிமலைக்கு (Sabarimala) விரதம் இருந்து யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியிலேயே பெரும்பாலும் விரதத்தை துவக்கி விடுவார்கள். குருசாமி கையால் துளசி மணிமாலை அணிந்து தான் ஐயப்ப விரதத்தை துவக்க வேண்டும். முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் கருப்பு உடை அணிந்தும், பல வருடங்களாக சபரிமலை சென்றவர்கள் காவி, நீலம் நிறங்களில் உடை அணிந்தும் விரதம் இருக்க வேண்டும். Special Bus for Sabarimala: ஸ்ரீ ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விபரம் இதோ.!
32 விரத முறைகள்:
1) சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ ஐய்யப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி அய்யப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கிவிட வேண்டும்.
2) இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள், விரத காலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
3) இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரண கோஷங்கள் முழங்க வேண்டும்.
4) விரத காலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் பழம், பால் போன்ற ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
5) சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள ஆடைகளை அணிதல் வேண்டும்.
6) ஐய்யப்ப விரதத்தின்போது வீட்டு பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.
7) விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை பழக்கத்தை பயன்படுத்தக்கூடாது.
8) சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சார்ய விரதம் ஆகும்.
9) மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
10) இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்துறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
11) எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
12) மற்றவர்களிடம் பேசும் பொழுது, சாமி சரணம் எனத் தொடங்கி, பின் விடை பெறும் பொழுதும் சாமி சரணம் எனச் சொல்ல வேண்டும்.
13) விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே, இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
14) பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை 'ஐயப்பா' என்றும், பெண்களை 'மாளிகைப்புறம்' என்றும், சிறுவர்களை 'மணிகண்டன்,' சிறுமிகளை 'கொச்சி' என்றும் அழைக்க வேண்டும்.
15) எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும். Astrology: செவ்வாய் தோஷம் திருமணத்தின் போது ஏன் முக்கிய தோஷமாக பார்க்கப்படுகிறது? விஞ்ஞான உண்மை என்ன?!
16) மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல், சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செய்யவேண்டும்.
17) மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
18) யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர் வீட்டிலோ வழிபடுவது சிறந்தது.
19) மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக்கூடாது. அவசரகால பேரில், மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.
20) எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். குறிப்பாக மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும்.
21) இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் தேங்காய் உடைத்து, ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணத்தை தொடர வேண்டும். போகும்போது யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.
22) கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது.
23) 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.
24) யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே, பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும்.
25) பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமச் சடங்குகள் செய்து, நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.
26) இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
27) ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டவும்.
28) குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம்.
29) ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைக்கும்.
30) நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால், பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி அதிகரிக்கும்.
31) யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். பின், பூஜை அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.
32) புனித யாத்திரை நிறைவேறியதும், குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு, விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.