Astrology: 2025 ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 12, சென்னை (Astrology Tips): கன்னி ராசி மற்றும் துலாம் ராசியில் இருக்கும் சித்திரை (Chithirai) நட்சத்திரக்காரர்களே, சென்ற பங்குனி மாதம் முதல் நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி நடை போட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தொழில் வியாபாரம், புதிய வேலைவாய்ப்பு, வண்டி வாகனம் வாங்குதல், புதிய கடன் வாங்கி தொழில் ஆரம்பிப்பது, கடனை தீர்ப்பது, போன்ற நல்ல பல முன்னேற்றமான செயல்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்து இருக்கும். திருமண வயதினருக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் திருமணம் முடித்து விடவும். இல்லையென்றால் அதன் பிறகு ஒரு வருடம் தள்ளி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் ஆறு மாதங்களுக்கு உங்களுக்கு மிகச் சிறப்பான ஒரு வெற்றிகரமான நேரம் இது.

நீங்கள் தொட்டது துலங்கும், ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வங்கியில் புதிய கடன் பெறலாம், புதிய தொழில் ஆரம்பிக்கலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு யோகம் இருக்கிறது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. தோற்றப்பொலிவு, சென்ற இடமெல்லாம் சிறப்பு, திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் யாரை பார்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறீர்களோ அவர்களே உங்களை தேடி வருவார்கள். அனைத்து காரியங்களும் நீங்கள் நினைத்த உடனே நடைபெறும். பெரிய அலைச்சல் சிரமம் ஏதுமின்றி சுலபமாக நீங்கள் விரும்பும் காரியங்களை முடிக்க கோச்சாரப்படி இது ஒரு அருமையான நேரம். வரும் மார்ச் மாதத்திற்குள் உங்களுக்கு தேவையானவற்றை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். கலைத்துறையினருக்கு இது அமோகமான நேரம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் மிகப் பிரமாண்டமான வெற்றி பெறும். Astrology: 2025 ஆம் ஆண்டு அஸ்தம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

அரசியல்வாதிகளுக்கு இது பொன்னான நேரம். உங்களுக்கு பதவி,பதவி உயர்வு தேவைப்பட்டால் அதை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும். அரசு அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு பாராட்டுக்கள் கிடைக்கும். நிலுவை பணங்கள் வசூல் ஆகும். கடன் கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலை நீடிக்கும். உங்கள் ஜாதகப்படி திசை புத்திகள் நன்றாக இருந்தால் வீடு கட்டுவது, நகைகள் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது போன்ற நற்பலன்கள் சிறப்பாக நடைபெறும். மாணவர்கள் மிகச் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள். அவர்கள் விரும்பிய மேற்படிப்பு அமையும். பெண்களுக்கு இது பொன்னான நேரம். பொன், பொருள், நகை, ஆபரணங்கள் வீட்டு வகையிலான ஆடம்பர பொருட்கள் போன்றவற்றை வாங்கி அழகு பார்த்து மகிழ்வீர்கள். எதிரிகளாலேயே நன்மைகள் கிடைக்கக்கூடிய அருமையான நேரம் இது. சுய தொழில் புரிபவர்கள் அமோகமான லாபத்தை பெறுவார்கள். உங்கள் ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் லாபம் சுமாராக இருக்கும்.

பரிகாரம்: நமக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்பதற்காக இறைவழிபாட்டை மறந்து விடாதீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று வாருங்கள். பெரிய புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, பூஜைகள் செய்து வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் திசை புத்திகள் மிகவும் சிறப்பாக இருந்தால் உங்களை கையில் பிடிக்க முடியாது தங்கச் சங்கிலி தான் வேண்டும். ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் சுமாரான பலன்கள் நடைபெறும். மார்ச் மாதத்திற்கு மேல் இந்த நன்மையான பலன்களில் பாதி குறையும். கொஞ்சம் நீண்ட இழுபறிக்கு பின்னரே நீங்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும்.

அப்போது கடன் பிரச்சனைகள் ஏற்படும். உடல்நிலை குறைவு ஏற்படலாம். நண்பர்களால் கூட்டாளிகளால் பிரச்சனை ஏற்படலாம். தொழிலில் பிரச்சனை, லாபம் குறைவு தனியார் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை இழப்பு போன்ற பலன்களும் மார்ச் மாதத்திற்கு மேல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதனால் மார்ச் மாதத்திற்கு மேல் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் மாதத்திற்கு பிறகு கண்டிப்பாக நவக்கிரக சனிக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். நவக்கிரக சனி வழிபாடு நன்மை தரும். குச்சனூர் சென்று வந்தால் விசேஷம். துலாம் ராசி சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி, நன்மை, பணவரவு போன்ற நல்ல பலன்கள் மார்ச் வரை நடைபெறும். அதன் பின் குழந்தைகளால் பிரச்சனை, வீண் செலவு, விரையங்கள் போன்ற பலன்கள் நடைபெறும்.

மார்ச் வரை உங்கள் மதிப்பெண் 90, மார்ச்சுக்கு மேல் உங்கள் மதிப்பெண் 60.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.