First Day of Aadi Month 2024: ஆடி மாதம் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்..? வழிபடும் முறைகள் என்னென்ன..?

ஆடி மாதம் முதல் நாள் அன்று அம்மன் வழிபாடு, அம்மனை அழைக்கும் முறை, உகந்த நேரம் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Aadi Month 2024 (Photo Credit: @isvelan X | LatestLY)

ஜூலை 17, சென்னை (Festival News): ஆடி மாதம் (Aadi Month 2024) இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதம் பக்தர்களுக்கு மிகவும் விருப்பமான மாதமாகும். மாதப் பிறப்பு துவங்கி, அடுத்தடுத்து பல விசேஷமான முக்கிய நாட்கள் வர உள்ளன. ஆடி மாதத்தின் முதல் நாள் 'தலை ஆடி' (Thalai Aadi) என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் திருமணமான புதுமணத் தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கும் முறையும், சுமங்கலி பெண்களை அம்மனாக பாவித்து, வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

அம்மன் வழிபாடு: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, சிவன் கோவில், பெருமாள் கோவில் என அனைத்து கோவில்களிலும் விழாக் கோலாமாக காட்சியளிக்கும். இந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி புதன்கிழமை (இன்று) ஆடி மாதம் துவங்கியது. இந்த நாளில் அம்மனையும், குலதெய்வத்தையும் வீட்டிற்கு அழைத்து வழிபட வேண்டும். இதனால் வீடும் நம்முடைய வாழ்க்கையும் ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் செய்யும் வழிபாடு, அடுத்த 11 மாதங்களுக்கும் அம்மனின் அருளால் நம்முடைய வாழ்க்கை அலங்கரிக்கப்படும். TGC Vs LKK Highlights: திருச்சி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி..!

முதல் நாள் வழிபாடு: ஆடி முதல் நாள் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தயாராகலாம். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். முதலில் வாசல் தெளித்து கோலமிட்ட பிறகு, நிலை வாசலுக்கு சந்தனம், குங்குமம் வைக்கவும். நிலைவாசலில் மாவிலையுடன் வேப்பிலை கலந்து தோரணம் கட்டி தொங்கவிட வேண்டும். பிறகு கலசம் வைத்து, அந்த கலசத்திற்கு குலதெய்வத்தையும் அம்பிகையையும் எழுந்தருள செய்து, முழு மனதோடு வீட்டிற்கு அழைக்க வேண்டும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை குலதெய்வமாக நினைத்து வீட்டிற்கு அழைத்து வழிபடலாம்.

அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை: முதலில் நிலை வாசலில் விளக்கேற்றிய பிறகு, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். கலசத்தில் தண்ணீர் வைத்து வழிபடுபவர்கள், சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் சந்தனம், குங்குமம், ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சம் பழம் போட்டு, அதன்மீது மஞ்சள் பூசி தேங்காய் வைத்து கலசம் தயார் செய்யவும். கலசத்தில் நூல் சுற்றலாம். இல்லையெனில், சொம்பின் கழுத்து பகுதியில் மஞ்சள் நூலை மட்டும் சுற்றி வைக்கலாம். கலசத்தில் தண்ணீர் வைத்து வழிபடுபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அந்த தண்ணீரை மாற்ற வேண்டும். அரிசி வைத்து வழிபடுபவர்கள், ஆடி மாதம் முழுவதும் வைத்து வழிபடலாம். Aadi Memes: தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!

அம்மனை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் காலை 9.15 முதல் 11.45 வரையிலான நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடி முதல் நாளில் அம்மனுக்கு தலைவாழை போட்டு, படையல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குமேல் படையல் வைக்கலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் அம்மனை வீட்டிற்கு அழைத்து வழிபடலாம். தேங்காய் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்களும், இதே நேரத்தை பயன்படுத்தி தங்களின் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.