Bread Vada Recipe: பிரட் வைத்து மொறுமொறுப்பான வடை செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
பிரட் வைத்து சூடான, சுவையான வடை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
நவம்பர் 26, சென்னை (Kitchen Tips): மழைக் காலங்களில் வீட்டில் ஏதேனும் சூடாக சாப்பிட விரும்பினால், பிரட் இருந்தால் போதும். அதனை வைத்து மொறுமொறுன்னு வடை செய்யலாம். மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், மொறுமொறுவென்றும் வழக்கமாக செய்யும் வடையை விட சற்று வித்தியாசமான பிரட் வடை செய்து சாப்பிடலாம். பிரட் வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். பிரட் வடை (Bread Vada) எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம். Simple Cooking Tips: உஷார் இல்லத்ததரசிகளே... சமையலில் இந்த தப்பெல்லாம் மட்டும் செஞ்சிடாதீங்க.!
தேவையான பொருட்கள்:
பிரட் - 8 துண்டு
அரிசி மாவு - 125 கிராம்
ரவை - 50 கிராம்
தயிர் - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
சமையல் சோடா - 1 சிட்டிகை
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்பு, அதில் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
- பின் அதில் தேவையான அளவு உப்பு, ரவை, அரிசி மாவு சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர், அதில் சமையல் சோடாவை சேர்த்து, மீண்டும் 1 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து, மெதுவடை போன்று தட்டி நடுவே ஓட்டை போட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேப் போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் வடையாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பிரட் வடை ரெடி.