Chennai Airport: ஃபெங்கால் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் மூடல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இன்று இரவு 7 மணிவரையில் சென்னை விமான நிலைய சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30, மீனம்பாக்கம் (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கால் புயலாக (Fengal Cyclone) வலுப்பெற்று, இன்று இரவு நேரத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் அதிகாலை 4 மணிமுதல் கனமழை வெளுத்து வாங்கி, தாழ்வான இடங்களில் நீர் புகுந்துள்ளது. Indigo Flight Services Suspended: சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை; இண்டிகோ விமான சேவைகள் முற்றிலும் ரத்து.!
சென்னை விமான நிலையம் மூடல்:
இந்நிலையில், நண்பகல் 12 மணிமுதல் இரவு 7 மணிவரையில், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் (Chennai Airport Authority) அறிவித்து இருக்கிறது. விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதாலும், தொடர் கனமழை, மோசமான சீதோஷ்ணநிலை காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மேலும், இரவு 7 மணிக்கு மேல் நிலைமையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பெங்களூர், விசாகப்பட்டினம், கொழும்பு போன்ற நகரங்களில் இருந்து வந்த விமானங்கள், வானிலை காரணமாக மீண்டும் புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானம், தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனமும் தனது விமான சேவையை இன்று ஒருநாள் ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.