வானிலை: ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்.. மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Tamilnadu Rains (Photo Credit: @HTTimes X)

நவம்பர் 28, சென்னை (Chennai News): தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும். DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!

வானிலை (Weather):

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (28-11-2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தரைக்காற்று எச்சரிக்கை:

வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (29-11-2024) மாலை வரை பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை – மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இன்றும் நாளையும் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy):