பள்ளி மாணவிகள் மூவருக்கு பாலியல் தொல்லை; மனைவியை பிரிந்த ஆட்டோ ஓட்டுநர் கைது.!
இவர் ஏற்கனவே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.
டிசம்பர் 31, அத்தியமான்கோட்டை (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டை, நல்லம்பள்ளி பகுதியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதே பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:
இதனால் தற்போது தனியாக வசித்து வரும் பெருமாள் ஆட்டோ ஓட்டுநராகவும், விறகு வெட்டும் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நல்லம்பள்ளி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவிகளுக்கு, பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அத்தியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். Cuddalore News: குளத்து நீரில் குளிக்கச் சென்று சோகம்; 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலி.!
போதையில் அவ்வப்போது தகராறு:
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்தனர். அப்போது, பெருமாள் மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் பெறப்பட்ட நிலையில், அவ்வழக்கில் ஜாமினில் வெளியே இருக்கும் பெருமாள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மதுபோதையில் சாலையில் இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, போவோர் வருவோரிடம் சண்டை செய்வது என சர்ச்சை செயல்களை பெருமாள் தொடர்ந்து வந்துள்ளார்.
குற்றவாளி கைது:
பாதிக்கப்பட்டவர்கள் வம்பு எதற்கு என எந்த புகாரும் கொடுக்காத நிலையில், தற்போது 3 மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.