நெருங்கும் ஃபெங்கால் புயல்.. ஏற்றப்படும் புயல் கூண்டுகளும் அதன் அர்த்தங்களும்.. விபரம் உள்ளே..!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகக் கூடும் என்பதால், துறைமுகங்களில் 3 மற்றும் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 27, சென்னை (Chennai News): நேற்று (26-11-2024) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை - திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெற வலுபெறக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்நிலையில் ஃபெங்கல் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கால் (Fengal Cyclone) என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது. வானிலை: வேகமாக நகர்ந்து வரும் ஃபெங்கால் புயல்.. தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. தரைக்காற்று எச்சரிக்கை..!
புயல் எச்சரிக்கை கூண்டு: இதனால், தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை ஆகிய மூன்று துறைமுகங்களில் 4-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் துறைமுகங்களில் ஏற்றப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. புயல் எச்சரிக்கை கூண்டுகளில் மொத்தம் 11 வகைகள் உள்ளன. ஒவ்வொரு கூண்டும் புயலின் நிலையை வெளிப்படுத்தும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளையும், இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன கூண்டுகளையும் ஏற்றுவார்கள்.
கூண்டு 1: இது புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டால் ஏற்றப்படுவதாகும். இதனால் துறைமுகங்கள் பாதிக்கப்படாது. பலமான காற்று வீசும்.
கூண்டு 2: புயல் உருவாகி உள்ளதை எச்சரிப்பதற்காக இந்த கூண்டு ஏற்றப்படும். இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
கூண்டு 3: திடீர் காற்றோடு மழை பொழியும் என்றும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றும் இதன் அர்த்தம் ஆகும். Cyclone Fengal Live Tracker: தமிழகத்தை அச்சுறுத்த வரும் ஃபெங்கால்.. புயலின் நகர்வுகளை நேரடியாக பார்ப்பது எப்படி?.. விபரம் இங்கே.!
கூண்டு 4: இந்த எச்சரிக்கை துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்றும் உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை என்றும் அர்த்தம்.
கூண்டு 5: துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கடக்கும் என்பதனை குறிப்பதற்கு இந்த கூண்டு ஏற்றப்படும்.
கூண்டு 6: துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கடக்கும் என்பதனை குறிப்பதற்கு இந்த கூண்டு ஏற்றப்படும்.
கூண்டு 7: இந்தக் கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகம் வழியாகவோ அல்லது துறைமுகத்தின் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
கூண்டு 8: புயல் வலுப்பெற்று தீவிரப்புயலாக அல்லது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது என்பதனை குறிப்பதற்கு இந்தக் கூண்டு ஏற்றப்படும். மேலும் இந்த வலுப்பெற்ற புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கடக்கும்.
கூண்டு 9: புயல் வலுப்பெற்று தீவிரப்புயலாக அல்லது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது என்பதனை குறிப்பதற்கு இந்தக் கூண்டு ஏற்றப்படும். மேலும் இந்த வலுப்பெற்ற புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கடக்கும்.
கூண்டு 10: அதிதீவிர புயலாக உருவாகியுள்ள புயல் துறைமுகம் அல்லது துறைமுகத்தின் அருகே கடந்து செல்லும்போது பெரிய அபாயம் ஏற்படும் என்பதனை குறிப்பதாகும்.
கூண்டு 11: இதுவே உச்சக் கட்ட எச்சரிக்கை ஆகும். அதிதீவிர புயலால் வானிலை மையத்துடன் தகவல் துண்டிக்கப்பட்டது என்பதே இதன் பொருளாகும். இந்தத் தருணத்தில் ஏற்படும் புயலால் பெரும் சேதம் ஏற்படும்.