Minister Ma. Subramanian: விமானப்படை சாகசத்தை காணவந்து ஐவர் பலியான விவகாரம்.. காரணம் என்ன?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.!

யாருமே சிகிச்சை கிடைக்காமல் அல்லது கூட்ட நெரிசலால் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Ma. Subramanian (Photo Credit: @Subramanian_ma X)

அக்டோபர் 07, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள மெரினா கடற்கைரையில், சுமார் 15 இலட்சம் மக்கள் முன்னிலையில், இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு தினத்தையொட்டி வான் சாகசங்கள் நடந்தது. இதனைக்கான வந்த மக்கள் பேருந்து, இரயில் வசதிகள் போதாமல் மிகப்பெரிய இன்னலை எதிர்கொண்ட நிலையில், பலரும் குடிக்க நீர் கிடைக்காமல் தவித்துப்போயினர். இறுதியில் நீர் பற்றாக்குறை மற்றும் சுட்டெரித்த வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். 102 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமானப்படை அறிவுறுத்தி இருந்தது:

இந்த விசயம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று சென்னை மாநகர மேயர் பிரியாவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், அரசு ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்பாக்கம் உட்பட பகுதிகளில் இருந்த மருத்துவமனைகளில் மொத்தமாக 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருந்தது. 40 அவசர ஊர்திகள், ஆயிரக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் தயாராக இருந்தனர். வெயிலின் தாக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டதால் குடை, கண்ணாடி, தண்ணீர் போன்றவற்றை எடுத்து வருமாறு விமானப்படை அறிவுறுத்தி இருந்தது. உயிரிழந்த 5 நபர்கள் இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்கள். Ma Subramanian: சென்னை விமான சாகசத்தை காணவந்த 4 பேர் பலி., 90 பேர் காயம்.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்..! 

Chennai Air Show 2024 (Photo Credit: @sweathkumar X)

5 பேர் பலி., 102 பேர் மருத்துவமனையில் சிகிச்சை:

உயிரிழப்பு வருத்தத்திற்குரியது தான். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. ஐவரின் இறப்பு வருத்தத்திற்குரியது. இவை அனைத்தும் வெயில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஐவரும் சிகிச்சை பலனின்றி இறக்கவில்லை. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 43 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஓமந்தூராரில் 49 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதி செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக வெயில் தாக்கத்தால் 102 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். மொத்தமாக இவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசியலாக்க வேண்டாம்:

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் கால்முறிவு, குடலிறக்கம், செரிமான கோளாறு உட்பட பல பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வாய்ப்பு சென்னைக்கு கிடைத்த பிரம்மாண்டமான நிகழ்வு, இதனை அரசியல்படுத்த வேண்டாம். இந்திய விமானத்துறை கட்டமைப்பை உலகுக்கு அறிவிக்கும் செயல்பாட்டை நாம் நல்ல நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பு வருத்தம் எனினும், வெயில் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தார்கள், கூட்ட நெரிசலால் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும்" என பேசினார்.

மேயர் பிரியா பதில்:

அதனைத்தொடர்ந்து விளக்கம் அளித்த மாநகராட்சி மேயர் பிரியா, "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. நேற்று வெயிலின் காரணமாக சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. தண்ணீர் தொட்டிகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. உயிரிழப்புகள் வருத்தம் தருகிறது. நானும் நேற்று மாலை 4 மணிவரையில் மெரினாவில் பாதுகாப்பு பணியில் இருந்தேன்" என தெரிவித்தார்.