Director Cheran: ஹாரன் அடித்து வம்பு வளர்த்த தனியார் பேருந்து ஓட்டுநர்; நடுரோட்டில் சம்பவம் செய்த இயக்குனர் சேரன்.!

வழிவிட இடவசதி இல்லாத சாலையில் தொடர்ந்து ஹாரன் அடித்தபடி எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை, இயக்குனர் சேரன் நடுரோட்டில் பேருந்தை மறித்து கண்டித்த சம்பவம் நடந்துள்ளது.

Director Cheran Argument with Bus Driver (Photo Credit: @ThanthiTV / @directorcheran X)

ஆகஸ்ட் 13, கடலூர் (Cuddalore): தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், சிறந்த நடிகராகவும், எழுத்தாளராகவும், சமூக ஆர்வலராகவும் கவனிக்கப்படுபவர் சேரன் (Director Cheran). கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர், தற்போது வரை பல வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கிறார். காலத்தால் மறையாத, மறக்க இயலாத பல காதல் காவியங்களை கொடுத்த பெருமையும் இவரைச்சாரும்.

முன்னணி இயக்குனர் & சமூக ஆர்வலர்:

பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உட்பட பல படங்களை இவர் இயக்கி வழங்கி இருக்கிறார். நடிகராக 1990ல் இருந்து திரை வாழ்க்கையை தொடங்கிய சேரன் சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, சென்னையில் ஒருநாள், ஆனந்தம் விளையாடும் வீடு என பல படங்களில் நடித்து இருக்கிறார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அறிவுரையும் எதிர்கால தலைமுறைக்கு வழங்கி இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3-யிலும் கலந்துகொண்டு 91 வது நாட்களில் வெளியேறினார். Movies Releasing On August 15th: சுதந்திர தினத்தன்று வெளியாகும் படங்கள்.. மக்களுக்கான சினி விருந்து..! 

நடிகர் சேரன் - தனியார் பேருந்து ஓட்டுநர் வாக்குவாதம்:

இந்நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி தனக்கு சொந்தமான காரில் பயணம் செய்த சேரன், அதிக சப்தம் எழுப்பி இடையூறு செய்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. சேரனின் கார் வழிவிட்டு ஓதுங்கி செல்ல இயலாத சாலையில், தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி வந்த பேருந்து ஓட்டுநரை, பெரியகங்கணக்குப்பம் பகுதியில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி சேரன் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஓட்டுநரை வறுத்தெடுத்த சேரன்:

இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், இயக்குனர் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். காரில் இருந்து இறங்கிய சேரன், பேருந்து ஓட்டுநரை நோக்கி கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்களின் தகவல்படி, கடலூர் - புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்துகள் நேரத்தை வைத்து இயங்கி வருகின்றன. பேருந்து நிலையத்தில் புறப்படுவதில் இருந்து, இலக்கை சென்றடையும் வரை போட்டிதான் என கூறப்படுகிறது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

இதனால் ஒருவரையொருவர் முந்திச்செல்லவும், சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளை ஒதுங்கிச்செல்லவும் தடை செய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்தி இடையூறுகளை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறாக நடிகர் சேரனின் கார் என்பது தெரியாமல் அதிக ஒலி எழுப்பி வந்த ஓட்டுநர் கண்டனத்தை பெற்றுள்ளார். வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிக வேகத்தில், அதிக ஒலி எழுப்பும் ஹாரனை கொண்டும் இயங்கும் பேருந்துகள் குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

வீடியோ நன்றி: முத்திரை டிவி