PM Modi US Visit: அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; பயணத்திற்கான விபரங்கள் என்ன?.. முழு விபரம் இதோ.!
3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்து உரையாற்றும் பிரதமர் மோடி, அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
ஜூன் 20, புதுடெல்லி (NewDelhi): அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கடந்த ஜி20 நாடுகள் 2023 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார். இருதலைவர்களும் தங்களிடையே சிறு உரையாடல் வைத்துக்கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் இந்திய பிரதமரை அமெரிக்காவுக்கு நேரில் அரசுமுறை பயணம் வர கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை என 3 நாட்கள் அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது அமெரிக்க அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோல, அமெரிக்காவில் நடைபெறும் மாபெரும் யோகா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களிடையே உரையாற்றவும் இருக்கிறார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் உள்ள முக்கிய 20 நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட 1500 தொழிலதிபர்கள் மூலமாக இந்தியாவுக்கு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த பயணத்தின் போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நிறுவனங்களான மாஸ்டர்கார்ட், கோகோ-கோலா, அடோப், விஸ்டா ஆகிய நிறுவன தலைவர்களும் பிரதமரை நேரில் சந்திக்கின்றனர்.
அமெரிக்க பயணம் நிறைவு பெற்றதும் பிரதமர் நரேந்திர மோடி எகிப்து நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று இந்த பயணத்தின் தொடக்கமாக டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.